அன்வார்: 20 அம்னோ சம்செங்கைக் கண்டு பயந்து விடாதீர்

 

Anwar - 20 Samsengபுக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு முன்னதாக நேற்றிரவு பக்காத்தான் தலைவர்கள் அங்கு ஒன்றுகூடி தங்களுடைய வலுமையைக் காட்டினர்.

ஹான் சியாங் கல்லூரி மண்டபத்தில் திரண்டிருந்த சுமார் 3,000 பேர் அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு தலைவரும் மண்டபத்திற்குள் வந்து சேர்ந்த போது மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

சரியாக இரவு மணி 9.00க்கு மண்டபத்திற்குள் வந்த புக்கிட் குளுகோர் வேட்பாளர் ராம்கோபாலை “ராம்கர்பால்!! ராம்கர்பால்” என்று மண்டபமே அதிரும் அளவிற்கு மக்கள் முழங்கி வரவேற்றனர்.

அதே போன்ற வரவேற்பு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கும் அளிக்கப்பட்டது.

அன்வார் இப்ராகிம் வந்து சேர்ந்த போது மக்கள் “ரிபோமாஸி” என்று முழங்கினர்.

கடுமையாகவும் உரத்த குரலிலும் உரையாற்றிய அன்வார் இப்ராகிம் கடந்த புதன்கிழமை பினாங்கு சட்டமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஒரு சிறிய சம்செங் கும்பலைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றார்.

“அம்னோ நம்பிக்கை இழந்து நிற்கிறது, செய்வதற்கு ஏதும் இல்லை -அதனால்தான் அவர்கள் சம்செங்களை வைத்திருக்கின்றனர். தேவானுள் நுழைந்த 20 அம்னோ சம்செங்களைக் கண்டு பயப்படுகிறீர்களா? அவர்களைக் கண்டு பயப்படாதீர்கள்”, என்று அவர் கர்ஜித்தார்.

“இது இனக் கலவரம் நடந்த 69 (மே 69) அல்ல. இது அம்னோவுக்கான போராட்டம் அல்ல. அனைத்து மலேசியர்களுக்குமான போராட்டம். இது மலாய்க்காரர்கள் அல்லது சீனர்களுக்குகான சண்டையல்ல. இது அனைத்து மலேசியகளுக்குமானது”, என்று மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே அன்வார் கூறினார்.

“சாக்கடை அரசியல் அவர்களுடையது. ஆனால் நாம் தொடர்ந்து அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

பினாங்கு சட்டமன்றத்தில் அம்னோ குண்டர்கள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கடுமையானதாகக் கருதி நடவடிக்கை எடுப்பார் என்று உறுதி அளித்த அன்வார் தாம் டிஎபி தலைமைச் செயலாளருக்கு உறுதுணையாக இருப்பதாக மேலும் கூறினார்.

ஸாஹிட் எங்கே இருக்கிறீர்?

உள்துறை அமைச்சர் ஸாஹிட்டை சாடிய அன்வார், “எங்கே இருக்கிறீர்? உமது வேலையைச் செய்கிறீரா? என்று கேட்டார்.

“பிஎன்னால் நாடு பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்யவும், நாட்டின் ஒற்றுமையைத் தற்காக்கவும் இயலாது என்றால், தயவு செய்து விளகிக்கொள்ளுங்கள்” என்று அன்வார் மக்களின் பலத்த கைத்தட்டலுக்கிடையில் கூறினார்.