மத மாற்ற எதிர்ப்பு பேரணி ஷா அலாமில் தொடங்கிற்று

முஸ்லிம்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்ட மத மாற்ற எதிர்ப்பு பேரணி இன்று ஷா அலாமில் பிற்பகல் மணி 2 அளவில் தொடங்கிற்று.

முஸ்லிம் அரசு சார்பற்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி “ஒரு மில்லியன் முஸ்லிம்கள் கூடும் பேரணி” என்று கூறப்படுகிறது. இப்பேரணி சமயங்களுக்கிடையில் பிணக்கு ஏற்படுவதற்கான வித்தாக அமையும் என்று அஞ்சப்படுகிறது.

சர்ச்சைக்குரிய பெர்காசா, அம்னோ மற்றும் பாஸ் இளைஞர் அணி உட்பட சுமார் 3,000 அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆதரவு பெற்றுள்ளதாக கூறப்படும் இப்பேரணி கிறிஸ்துவ எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி விடத்தான் உதவும் என்று இதன் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் இது ஓர் அரசியல் சார்பற்ற கூட்டம் என்று கூறியிருப்பதற்கு மதிப்பு அளித்தும் சமயங்களுக்கிடையில் சச்சரவு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இஸ்லாமிய கட்சியான பாஸ் இப்பேரணியில் கலந்து கொள்ளவில்லை.

இப்பேரணியின் ஆதரவாளர்கள் இது சமய உணர்வை வலுப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் என்பதோடு அரசியல் மற்றும் சிந்தாந்த பிளவுகளை அகற்றி தங்களுடைய சமயத்திற்கு ஏற்பட்டுள்ள மருட்டலுக்கு எதிராக ஒன்றுபடுதலாகும் என்று கூறுகின்றனர்.

மத மாற்றம் அதிகரித்து வருகிறது என்பதற்கான புள்ளிவிபரங்களை அளித்து சமயத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களை பாதுகாப்பதற்கு சமூகம் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது என்று பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சமய ஆய்வாளர்கள் இப்புள்ளிவிபரங்கள் மீது ஐயப்பாடு தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் விரோதத்தையும் சந்தேகத்தையும் உருவாக்க்கி சமயங்கிடையில் மோதலை உண்டுபண்ணும் என்று கூறப்படுவதை ஏற்பாட்டாளர்கள் மறுக்கின்றனர்.

இப்பேரணி அமைதியாக நடைபெறும் என்றும் வன்செயலை ஊக்குவிக்காது என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இப்பேரணி அரசியல்வாதிகளால் கடத்தப்படுவதற்கு எதிராகவும் அவர்கள் இருக்கின்றனர்.

இபேரணி பிற்பகல் மணி 2 க்கு தொடங்கவிருக்கிறது.

பிற்பகல் மணி 2.15: பங்கேற்பாளர்கள் அரங்கத்திற்குள் வரத்தொடங்கியுள்ளனர்.

ரெலா மற்றும் போலீசார் அவர்களின் பைகளை சோதிக்கின்றனர்.

குழந்தைகள் உட்பட, பங்கேற்பாளர்கள் அனைத்து வயதினரும் காணப்படுகின்றனர். “ஒன்றுபட்ட மலாய்க்காரர்கள், முதன்மை நிலை இஸ்லாம்” மற்றும் “அரச அமைப்புகளை தற்காப்போம்” என்ற வாசகங்கள் பொரிக்கப்பட்ட பதாகைகள் காணப்பட்டன.

80,000 பேர் அமரக்கூடிய அந்த அரங்கத்தில் இன்னும் ஏராளமான இருக்கைகள் காலியாக இருக்கின்றன.

பிற்பகல் மணி 2.22: அரங்கத்தின் ஐந்தில் ஒரு பகுதி நிரம்பியுள்ளது. சில பங்கேற்பாளர்கள் “சிலாங்கூரில் மலாய்க்காரர்களை கிறிஸ்துவர்களாக்குவதற்கு யார் பொறுப்பு?” என்ற தலைப்பைக் கொண்ட துண்டுப் பிரசுங்களை வைத்திருப்பது காணப்படுகிறது.

பிற்பகல் மணி 2.50: ஒலிபெருக்கியின் வழி “பிரச்னைகளை உண்டுபண்ணக்கூடிய துண்டுப் பிரசுரங்களை” சில தரப்பினர்கள் விநியோகிக்கின்றனர் என்று ஓர் அறிவிப்பு கேட்கப்படுகிறது.

“இது ஓர் அமைதியான கூட்டம். தயவு செய்யவும். இக்கூட்டத்தைப் பிளவு படுத்தாதீர்கள்”, என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.

“இந்த துண்டுப் பிரசுங்களை விநியோகிப்பவர்களைக் காண்பவர்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படையுங்கள்.”

பிற்பகல் மணி 3: 5,000 க்கும் குறைவானவர்கள் அரங்கத்தின் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்படுகிறது. பெர்காசாவின் தலைவர் இப்ராகின் அலியும் உறுப்பினர்களும் வந்திருக்கின்றனர்.

(மேல்விபரம் பின்னர்)