உதயகுமார் அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்தின் உதவியை நாடுகிறார்

 

Uthaya &Red Crossகாஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் அவலநிலையை விசாரிக்கக் கோரும் கடிதம் ஒன்றை ஹிண்ட்ராப் கடந்த புதன்கிழமை அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்திடம் சமர்ப்பித்தது.

தாம் காஜாங் சிறையில் நடத்தப்படும் முறை குறித்து உதயகுமார் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

தம்மையும் இதர கைதிகளையும் சந்தித்து உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்வதற்கு ஒரு சுயேட்சையான விசாரணைக் குழுவை அனுப்புமாறு அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.

“தயவு செய்து இந்த…கடுந்துயரத்தை நிறுத்த எங்களுக்குUthaya &Red Cross1 உதவுங்கள். தயவு செய்து இந்த சித்ரவதை, கொடுமைப்படுத்துகிற, இரக்கமற்ற மற்றும் அவமதிக்கிற நடத்துதலை நிறுத்த எங்களுக்கு உதவுங்கள்”, என்று உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஹிண்ட்ராப் பிரதிநிதி ஜே.வசந்தா அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்தின் வட்டார துனைத் தலைவர் மேக்ஸ் வியிக்மானிடம் கோலாலம்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் வழங்கினார்.

வழக்குரைஞர் மன்றத்திற்கும் மகஜர்

அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்திடம் அளித்த புகார்களைப் போன்ற புகார்கள் அடங்கிய மகஜர் ஒன்று வழக்குரைஞர் மன்றத்திடமும் அதே நாளில் வழங்கப்பட்டது.

uthaya“இவ்விவகாரத்தில் தலையிடுமாறு நாங்கள் மலேசிய வழக்குரைஞர் மன்றத்தை கேட்டுக்கொள்வதோடு இந்த சித்ரவதை, கொடுமைப்படுத்துகிற, இரக்கமற்ற மற்றும் அவமதிக்கிற நடத்துதலையும் காஜாங் சிறைச்சாலையின் சுவர்களுக்குப் பின்னால் நடக்கும் கட்டுக்கடங்காத அதிகார அத்துமீறல்களையும் விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க அதிகாரிகளை வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்”, என்று அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 5, 2013 இல் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் உதயகுமாருக்கு 30 மாத கால சிறை தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது.