ரோஸ்மாவின் கைப்பைகள்: “நஸ்ரியின் மௌனம் ஒப்புதலுக்கு அடையாளமா?

பிரதமரின் துணைவியார் வைத்துள்ள விலை உயர்ந்த பிர்க்கின் ரக கைப்பைகள் மீது நாடாளுமன்றத்தில் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் பதில் அளிக்கத் தவறியிருப்பது உண்மையை ஒப்புக் கொள்வதற்கு அடையாளமா என்று டிஏபி வினவியுள்ளது.

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் 24 மில்லியன் அமெரிக்க டாலர் பெறும் வைர மோதிரத்தை வைத்துள்ளார் எனக் கூறப்படுவதில் உண்மையில்லை என நஸ்ரி தமது நாடாளுமன்றக் கேள்விக்கு ஒரு வரியில் மிக கெட்டிக்காரத்தனமாக பதில் அளித்துள்ளதாக டிஏபி செர்டாங் எம்பி தியோ நீ சிங் கூறினார்.

ஆனால் நஸ்ரி முழுக் கேள்விக்கும் பதில் அளிக்கத் தவறி விட்டதாக அவர் சொன்னார்.

“ஆனால் அந்தக் கேள்வியின் இன்னொரு பகுதியான பிர்க்கின் கைப்பைகள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு பதில் கொடுப்பதை நஸ்ரி தவிர்த்துள்ளார்.”

“இப்போது அந்த பிர்க்கின் ரக கைப்பைகள் தொடர்பாக நஸ்ரி வேண்டுமென்றே விளக்கமளிக்கத் தவறியிருந்தால் அந்த குறிப்பிட்ட வதந்தி உண்மையானதா?” என தியோ வினவினார். அவர் டிஏபி-யின் தேசிய பிரச்சாரப் பிரிவுத் துணைத் தலைவரும் ஆவார்.

நாடாளுமன்றத்தில் தியோ எழுத்துப்பூர்வமாக சமர்பித்த கேள்வி இதுவாகும்: (1) 24 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வைர மோதிரம், பிர்க்கின் ரக கைப்பைகள் உட்பட பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை பிரதமரின் துணைவியார் வைத்துள்ளார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை பிரதமர் தெரிவிக்க வேண்டும்.”

ரோஸ்மா பொது இடங்களில் “பல முறை தமது பிர்க்கின் கைப்பைகளுடன்” காணப்பட்டுள்ளார் என அந்த செர்டாங் எம்பி மேலும் கூறினார்.

“இணைய மக்கள் தொகுத்துள்ள படங்களைப் பார்க்கும் போது அதிகாரத்துவ நிகழ்வுகளிலும் விடுமுறையில் செல்லும் போதும் அவர் கையில் பிடித்துள்ள பிர்க்கின் ரக கைப்பைகள் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு அல்ல வெவ்வேறு வகையான நிறங்களில் உள்ள 11 வகையான கைப்பைகள்”, என தியோ மேலும் குறிப்பிட்டார்.