அகதிகளை அனுப்பிய ஐஜிபி-க்கு எதிராக கண்டன மனு

Handing over of Memorandumஅகதிகளாக மலேசியாவில் தஞ்சம் புகுந்த மூன்று தமிழர்களை திருப்பி அனுப்பிய தலைமை போலிஸ் படைத்லைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அவர்களுக்கு எதிராக கண்டன மனு வழங்கப்பட்டது. இன்று காலை சுமார் 11 மணியளவில் கோலாலம்பூர் புக்கிட் அமான் போலிஸ் தலைமையகம் முன் திரண்ட இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் அம்மனுவை வழங்கினர்.

கடந்த மே-மாதம் 15-தேதி கிருபாஹரன், கிருபநாதன் மற்றும்  குசேந்தன் என்பவர்களை போலிஸ் கைது செய்தது. அதன் பிறகு அவர்களை மே 26-ஆம் தேதி இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

இது சார்பாக கருத்துரைத்த போலிஸ் படைத்தலைவர் அம்மூவரும் விடுதலை புலிகள் இயக்கத்தை உயிர்பிக்கும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கருதுவதாகவும், அதனால் அவர்களை இமிகிரேஷன் சட்டத்தின் கீழ் திரும்ப அனுப்புவதாக கூறினார். மேலும் மலேசியாவில் உள்ள இலங்கை அகதிகளை கண்காணிக்க போவதாகவும் கோடிகாட்டியிருந்தார்.

இன்று நிகழ்வில் கலந்து கொண்ட சுவராம் இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம், அனைத்துலக நீதி கோட்பாடுகளுக்கு முரணாக போலிஸ் படைத்லைவர் அகதிகளை நாடு கடத்தி மீண்டும் இலங்கை  அரசிடம் ஒப்படைத்ததை கடுமையாகச் சாடினார். அம்மூவரும் நடத்தப்பட்ட முறை இமிகிரேசன் சட்டத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என்றாரவர்.

மேலும் கூறுகையில், “இலங்கை அரசாங்கம்தான் இந்த நடவடிக்கையின் இயக்குனர், அதற்கு உடந்தையாக நமது போலிஸ் செயல்படுவது கண்டத்திற்குறியது, அதனால்தான் இந்த கண்டனம்” என்றார் ஆறுமுகம்.

Bannerஇந்த நிகழ்வுக்கு தலைமையேற்ற மகாலட்சுமி இராமகிருஷ்ணன், மலேசிய போலிஸ் தமிழ் அகதிகளை திரும்பவும் இலங்கைக்கு அனுப்புவது மிகவும் கொடூரமானது என்றார். இனியும் இப்படி செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றார். மேலும் இலங்கையில் முஸ்லீம் மக்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதையும் சுட்டிக் காட்டினார்.

இதில் கலந்து கொண்ட செலயாங் நகராண்மைகழக உறுபினருமான  குணராஜ். போஸ்னியா, பாலஸ்தீன் போன்ற நாடுகளின் அகதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பையும் வாழ்வாதாரா வழிமுறைகளையும் வழங்கும் மலேசிய, ஏன் தமிழர் அகதிகளை பழிவாங்க முற்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

இன்று வழங்கப்பட்ட மனுவில் மலேசியாவில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் ஈழப்போரட்டதிற்கு ஆதரவு நல்கியவர்கள் என்றும், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தமிழர்கள் மீதான இன படுகொலை, இன அழிப்பு சம்பவங்களின் அடிப்படையில் மலேசியா, இலங்கை மீதான தனது வெளியுறவு கொள்கையை மறு பரிசீலனை செய்ய மலேசிய சமூக இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும் வலியுறுத்தியது.

கண்டன மனுவை புக்கிட் அமான் தலைமையத்தின் தொடர்புத்துறை அதிகாரி டிஎஸ்பி ரிசால் பின் அப்துல் சிடெக் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சிலாங்கூர் தமிழர் சங்கத்தின் துணைதலைவர் எல். சேகரன், அக்கரை க்கொண்ட குடிமக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ப. கந்தசாமி, திரவிட கழகத்தின் பஞ்சு மற்றும் ஈழத்தமிழர் ஆதரவுக்குழுவினர் கலந்து கொண்டனர்.