இந்திரா காந்தி வழக்கு: இன்று குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டிய நாள்

 

Kula-Indra family members5

 

இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்ட பிரசன்னா என்ற குழந்தையின் தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் அப்துல்லா அவரின் ஆறு வயது பெண் குழந்தையை இஸ்லாத்திற்கு மதம் மாறாத அக்குழந்தையின் தாயார் எம். இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க அவருக்கு ஈப்போ உயர்நீதிமன்றம் ஒரு வார கால அவகாசம் கொடுத்திருந்தது. அவர் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.

இன்று நண்பகல் மணி 12.00 அளவில் முகம்மட் ரித்துவான் அவரின் பிரசன்னா டிக்சா என்ற பெயர் கொண்ட பெண் குழந்தையை இந்திரா காந்தியின் வழக்குரைஞர் நிறுவனம் Kuala & Associates டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிபதி மறுத்து விட்டார். ஆகவே, குழந்தையை ரித்துவான் இன்று ஒப்படைத்தேயாக வேண்டும் என்று வழக்குரைஞர் மு. குலசேகரன் கூறியுள்ளார்.

மணி 11. 45 அலவில் தொடர்பு கொண்டு விசாரித்ததில் தாம் இன்னும் காத்துக் கொண்டிருப்பதாக குலா கூறினார்.

 

குழந்தை ஒப்படைக்கப்படவில்லை

 

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் ஈப்போ உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவுப்படி அவரின் குழந்தை பிரசன்னா டிக்சாவை நண்பகல் மணி 12.00 அளவில் இந்திரா காந்தியின் வழக்குரைஞர் நிறுவனமான குலா & அசோசியேட்ஸ்சிடம் ஒப்படைக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவின்படி குழந்தையை இன்று ஒப்படைக்காததற்கான காரணம் நீதிமன்றம் “மிகக் குறுகிய காலஅவகாசம்” கொடுத்துள்ளதுதான் என்று வழக்குரைஞர் குலாவிடம் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவலை ரித்துவானின் வழக்குரைஞர் அளித்துள்ளார். மேலும், அந்த வழக்குரைஞர் அக்குழந்தையின் படத்தையும் டிவிட் செய்துள்ளார். அக்குழந்தை டூடோங் அணிந்திருக்கிறது.

மிகக் குறுகிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தைப் பற்றி கருத்துரைத்த மு. குலசேகரன், “நாங்கள் பராமரிப்பு உத்தரவு ஒன்றை 2010 ஆம் ஆண்டிலேயே பெற்றுள்ளோம்”, என்றார்.