பிற்பகல் மூன்று மணி அளவில் அந்த அரங்கத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிறைந்திருந்தனர். பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி அங்கு சென்றடைந்தார்.
அதற்குச் சற்று நேரத்தில் சிலாங்கூரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, முன்னாள் பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியாவும் வந்து சேர்ந்தனர்.
அந்த கூட்டம் அமைதியான நிகழ்வு என்றும் கலவரங்களை மூட்டுவதற்கான எந்த முயற்சியும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கியில் மீண்டும் அறிவித்தனர். மற்ற சமயங்கள் மீது சந்தேகத்தைக் கிளப்புவதோ சிறுமைப்படுத்துவதோ கூட்டத்தின் நோக்கமல்ல என்றும் கூறப்பட்டது.
ஹிம்புன் இணைத் தலைவர் யூஸ்ரி முகமட் முதலாவது பேச்சாளர் ஆவார். மதம் மாறுவதும் மதம் மாற்றம் செய்யப்படுவதும் மிகப் பெரிய பாவங்கள் என அவர் சொன்னார். மதம் மாற்றத்தைக் காட்டிலும் பெரிய மனித உரிமை மீறல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரங்கில் மிதமான எண்ணிக்கையில் கூடியுள்ள மக்கள் மில்லியன் கணக்கான முஸ்லிம்களைப் பிரதிநிதிப்பதாக யூஸ்ரி மேலும் சொன்னார்.
சட்டத்தை மீறி முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்கான துணிச்சலை அந்த நிகழ்வு முஸ்லிம்களுக்குக் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“ஒரு மில்லியன் முஸ்லிம்கள்” என அந்த நிகழ்வுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் வெறும் அடையாளமே தவிர நேரடியான அர்த்தம் அல்ல என்றும் யூஸ்ரி சொன்னார்.
சமய சுதந்திரத்தை அரசியலமைப்பு அனுமதித்த போதிலும் அது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்று அடுத்த பேச்சாளரான உஸ்தாஜ் அஸ்ஹார் யாக்கோப் கூறினார். காரணம் இஸ்லாம் ‘ஆதிக்கம் பெற்ற’ சமயமாகும்.
அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவு இஸ்லாத்துக்கு மேலாண்மையை வழங்குவதாக அவர் தொடர்ந்து குறிப்பிட்டார். “முஸ்லிம் அல்லாதவர்களுக்குச் சலுகைகள் உள்ளன. ஆனால் அவை இஸ்லாத்தின் மேலாண்மையை புறம் தள்ளக் கூடாது.”