ஸாரினா முஸ்லிம்தான், அப்படியே இருக்க வேண்டும் என்கிறார் தகப்பனார்

 

Zarina weddingஓர் இந்து கோயிலில் நடந்த திருமணத்தை சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா அதிர்நடவடிக்கையின் வழி நிறுத்தியது. அத்திருமண நிகழ்ச்சியின் மணமகளான ஸரினா மேல்விசாரணைக்காக ஜாயிஸ் அவரை வலிய இழுத்துச் சென்றது.

அம்மணமகளின் தந்தை அப்துல் மஜிட் குலாம் காடீர் அவரது மகள் ஸரினா ஒரு முஸ்லிம்தான் என்று இப்போது கூறிக்கொள்கிறார். ஸாரினா ஒரு முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர் என்றும், அவரின் மனைவி வசந்தாவும் முஸ்லிமாக மதம் மாறியவர் என்று மஜிட் தெரிவித்ததாக  த ஸ்டார் செய்தி கூறுகிறது.

தமது மனைவியின் முஸ்லிம் பெயர் ஸைநாப் என்று கூறிய மஜிட், தமது குழந்தைகள் எவரும் இஸ்லாத்தை கைவிட்டுவிடுவதை அனுமதிக்க மாட்டேன் என்றார்.

குடும்பத்தை கைவிட்டுவிடவில்லை

ஒரு செக்கியூரிட்டி கார்டாக பணிபுரியும் அப்துல் மஜிட் தாம் தமது குடும்பத்தை கைவிட்டுவிட்டதில்லை என்று மீண்டும் மீண்டும் கூறினார். உண்மையில், தமது இளைய மகள் வீட்டிற்கு இரவில் நேரங்கழித்து வருவதைக் கண்டித்ததற்காக தம்மை தமது குடும்ப வீட்டிலிருந்து தூக்கி எறிந்து விட்டனர் என்றாரவர்.

அப்போதிலிருந்து தாம் வீடற்றவராக பணி புரியும் இடத்திலேயே வாழ்ந்து வருவதாக கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸரினா தம்மைச் சந்தித்து சில பத்திரங்களில் கையொப்பமிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதை மறுத்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.