நஜிப்: குழந்தைகள் பராமரிப்பு தகராறுகளை உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்

 

najibசமயம் காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு சர்ச்சைகளை பெடரல் நீதிமன்றத்தை பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று சம்பந்தப்பட்ட குடும்பங்களை கேட்டுக்கொண்டார்.

நீதிமன்றம் இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்றாரவர்.

“சட்டத்துறை தலைவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் கலந்தாலோசிப்பார். அனைவரும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பார்கள் என்று நம்புகிறேன்”, என்று இன்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

இன்று பிரதமர் நஜிப் விடுத்திருக்கும் அதே வேண்டுகோளை தாம் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் இந்திரா காந்தி வழக்கில் முன்வைத்ததாகkula வழக்குரைஞர் குலசேகரன் கூறுகிறார்.

மத மாற்றம் காரணமாக குழந்தை பராமரிப்பு தகாறுகளுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண்பதற்கு பெடரல் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று தாம் இந்திரா காந்தி வழக்கு விசாரணையின் போது ஈப்போ உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டதாகவும், அக்கோரிக்கைக்கு அரசு தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் தமது கோரிக்கையை நிராகரித்து விட்டது என்றும்  இன்று தொடர்பு கொண்டபோது இந்திரா காந்தியின் வழக்குரைஞரான மு. குலசேகரன் கூறினார்.

இப்போது போலீஸ் தரப்பினரும் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தினரும் இவ்விவகாரத்தில் தலையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்திரா காந்தியையும் தம்மையும் தொடர்பு கொண்டுள்ளனர். ஈப்போ உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை அவர்கள் மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றார் குலா.

இவ்விவகாரத்தில் அதிகார அத்துமீறல் புரிந்துள்ள போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் இனியும் அப்பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழந்து விட்டார் என்று குலா மேலும் கூறினார்.