ஹிம்புன் பேரணி: மலாய்க்காரர்கள் உலகிலேயே மிகச் சிறந்த இனத்தினர்

ஷா அலாம் அரங்கில் பிற்பகல் மணி 2 க்கு தொடங்கிய மத மாற்றத்திற்கு எதிரான பேரணியில் பிற்பகல் மணி 4.20 க்கு உரையாற்றிய பாட்டினி யாக்கோப் முஸ்லிம் அல்லாதவர்கள்கூட நாட்ரா என்பவர் மதம் மாற்றம் செய்யப்பட்டதற்காக காலனித்துவ அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார்.

பாட்டினி சிங்கப்பூரில் 1950 ஆம் ஆண்டில் ஒரு டச்சு பெண் (நெதர்லாந்து நாட்டு பெண்) மாரியா ஹெர்டோக் என்பவரின் மத மாற்றம் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து நூல் எழுதியுள்ளார்.

முஸ்லிம்களை மத மாற்றம் செய்வதன் வழி முஸ்லிம் அல்லாதவர்கள் இப்போது ஏன் காலனித்துவாதிகளைப்போல் நடந்து கொள்கின்றனர் என்று அவர் வினவினார்.

“தயவு செய்து, முஸ்லிம்களை மத மாற்றம் செய்வதை நிறுத்துங்கள்”, என்றாரவர்.

மத மாற்றத்தை நிறுத்த அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்

பிற்பகல் மணி 4.40 க்கு பேசிய பார்ஹான் அப்துல்லா, மத மாற்றம் நிறுத்தப்படுவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றார்.

இவர் ஒரு காலத்தில் முஸ்லிம்களை மத மாற்றம் செய்யும் ஒரு முஸ்லிம் அல்லாதார் குழுவில் ஓர் அங்கமாக இருந்ததாக கூறிக்கொள்கிறார்.

“அரசமைப்புச் சட்டப் பிரிவு 11, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சமயச் சுதந்திரம் இருக்கிறது என்று கூறுகிறது.

“அரசமைப்புச் சட்டத்தை திருத்தி ‘சமயச் சுதந்திரம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே’ என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எம்பிகளை கேட்டுக்கொள்கிறோம்.

“முஸ்லிம்களுக்கு சுதந்திரம் (மதம் மாறுவதற்கு) இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது இஸ்லாமிய போதகராக இருக்கும் அந்த சபா மகன் மலேசியாவில் மத மாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்கவில்லை.

பிற்பகல் 4.50: பெல்டாவை தளமாகக் கொண்ட இளைஞர் அரசு சார்பற்ற அமைப்பின் பிரதிநிதியான அப்துல்லா அபு பாக்கார், பெல்டா குடியேற்ற திட்டங்களில் ஒரு மத மாற்ற சம்பவம் கூட இருக்காது என்று சூளுரைத்தார்.

இதற்கு முன்பு மத மாற்றம் ஏதும் இருந்ததா என்பது பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை.

மாலை மணி 5.00: யுஐடிஎம்மின் முன்னாள் துணை வேந்தரும் ஹிம்புனின் ஆலோசகருமான இப்ராகிம் அபு ஷா, விவிலிய நற்செய்திகள் பரப்புரையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிறிய கிறிஸ்துவ குழுவினர் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர் என்றார்.

இயன் புசானான் எழுதிய “Armies of God”  என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை மத மாற்றம் செய்யும் தொழில் விவிலிய நற்செய்திகள் இயக்கத்தின் வெகு வேகமாக வளரும் பிரிவு ஆகும் என்றார்.

மத்திய கிழக்கில் யூதர்களின் இலட்சியங்களுடன் இணைந்து கொண்டுள்ள விவிலிய நற்செய்தியாளர்களின் அரசியல், அதன் விவிவிய தத்துவங்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கு இறுதித் தடையாக இருப்பது முஸ்லிம் உலகம் என்று கருதுவது பெரும் கவலைக்குரியதாகும் என்றாரவர்.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு சமயப் பரப்புக் குழுக்கள் இருக்கின்றன என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“(நம்மிடையே மத மாற்றம்) ஏற்படுகிறது ஏனென்றால் நாம் இப்போது ஒன்றுபட்டிருக்கவில்லை; மருட்டப்பட்டிருந்தும் நாம் நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

“முஸ்லிம்களிடம் நாம் கேட்பது அவர்கள் குழப்பம் அடையாமல் இருக்க வேண்டும், மற்றும் அனைவரும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்”, என்று கூறிய அவர் டமான்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம் பற்றிய சர்ச்சையை சுட்டிக் காட்டினார்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப் ஊய் மற்றும் பல கிறிஸ்துவ தலைவர்கள் மலேசியாவை ஒரு கிறிஸ்துவ நாடாக மாற்றுவதற்கு திட்டமிடுகின்றனர் என்று கூறப்படும் சதித்திட்டத்தையும் அவர் சுட்டிப் பேசினார்.

அடுத்து, மாலை மணி 5.10 க்கு முஸ்லிம் மாணவர் இயக்கத்தின் பிரதிநிதி அஹமட் ஸயாஸ்வான் முகமட் ஹசான் மத மாற்றம் கிராமப்புறங்கள் மற்றும் பெல்டா குடியேற்றப்பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை. அது பல்கலைக்கழக விடுதிகளிலும் நடக்கிறது என்றார்.

இச்சவாலை எதிர்கொள்வதற்கு மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த பாடதிட்டங்கள் மாற்றப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்”, என்று அவர் கூறினார்.

இக்கட்டத்தில் சிலர் அரங்கிலிருந்து வெளியேறினர்.

மாலை மணி 5.25: பெர்காசா சிலாங்கூர் பிரிவைச் சேர்ந்த அப்துல்லா மன்சூர் அரசர் அமைப்புகள் குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களைச் சாடினார்.

அரசர் அமைப்புகளின் பங்கு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பவைகளுக்கு அப்பாற்செல்கிறது. அது இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆகும் என்றார்.

“சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா செய்தது சட்டப்படி சரியானது. நாங்கள் சுல்தானின் ஆணையை நிலைநிறுத்துகிறோம்”, என்று அங்கிருந்தவர்களின் கைத்தட்டல்களுக்கிடையில் கூறினார்.

அரசர் அமைப்புகள் குறித்து கேள்வி எழுப்புவது மலாய்க்காரர்களாகவும் முஸ்லிம்களாகவும் இருப்பது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

அவர் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் யுஐஎ பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரியைத்தான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

மாலை மணி 5.31: மழை பெய்கிறது. பேரணியின் நட்சத்திர பேச்சாளர், பேராக் மாநில முப்தி ஹருஸ்ஸானி ஸக்காரியா, மேடைக்கு வர தயாராகிறார்.

பலர் அவர் இருக்கும் இடத்தை நோக்கி நகர்கின்றனர். படம் எடுக்கின்றனர்.

மாலை மணி 5.50: அனைத்து மலாய்க்காரர்களும் “அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்”, ஆகவே மலாய்க்காரர்கள் உலகிலேயே மிகச் சிறந்த இனத்தினர் என்று ஹருஸ்ஸானி கூறினார்.

மலாய்க்காரர்கள் மிகச் சிறப்பானவர்களும்கூட ஏனென்றால் அவர்கள் “தங்குதடையின்றி பேசுகின்றனர்” மற்றும் அல்லாஹ் அதனை முதலில் அரபு மொழியில் வழங்கியிருந்தாலும் மலாய்க்காரர்களால் இஸ்லாத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

மனிதர்கள் அவர்களது சமய நம்பிக்கையை தற்காக்கத் தவறினால் பெருந்துன்பங்கள் விளையும் என்று அல்லாஹ் விடுத்திருக்கும் எச்சரிக்கைகளை திருக்குரானிலிருந்து அவர் வாசித்துக் காட்டினார்.

ஹருஸ்ஸானி தமது பேச்சை முடித்த அதே நிமிடத்தில் மழையும் நின்றது.

மாலை மணி 6.00: ஹிம்புன் இணைத் தலைவர் அஸ்மி அப்துல் ஹமிட் முஸ்லிம்களை கிறிஸ்துவர்களாக்கும் முயற்சியில் வெற்றி பெற முடியாது என்று அவர் விவிலிய பரப்புரையாளர்களை எச்சரித்தார்.

ஹிம்புன் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் “முஸ்லிம்கள் தங்களுடைய சமயம் குறித்து கூடிப்பேசுவது தவறா?”, என்று அவர் வினவினார்.

“அவர்கள் ஒன்றுகூடும்போது அதனை அவர்கள் ஜனநாயாக உரிமை என்கிறார்கள், ஆனால் நாங்கள் அவ்வாறும் செய்யும் போது நாங்கள் சமயங்களுக்கிடையில் பகைமையைத் தூண்டிவிடுகிறோம் என்கிறார்கள்”, என்றாரவர்.

அவர் ஹிம்புனின் 10 தீர்மானங்களை வாசித்தார். அவற்றில் ஒன்று மத மாற்றத்திற்கு எதிரான மற்றும் மத மாற்றம் சட்டம் (Anti-Apostasy and Proselytisation Act) இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையாகும்.

அனைத்து அமைப்புகளும், அரசியலோ இல்லையோ, இஸ்லாத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது ஹிம்புனின் தீர்மானமாகும்.

இஸ்லாத்தை பற்றி சமுதாயம் நன்கு அறிந்து கொள்வதற்கு அரசாங்கம் தகவல் அளிக்கும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதோடு, பள்ளிகள் மற்றும் உயர்கல்வி பாடத்திட்டங்கள் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஹிம்புன் கோரியுள்ளது.

இரவு மணி 6.15: சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பாஸ் கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான ஹசான் அலி நடத்திய பிராத்னையுடன் ஹிம்புன் பேரணி முடிவுற்றது.

ஹசான் அலி இங்கு ஒரு முஸ்லிமாக பங்கேற்கிறார். அரசியல்வாதி அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் என்றல்ல என்று நிகழ்ச்சி அறிவிப்பாளர் கூறினார்.

முஸ்லிம்கள் தங்களுடைய சமய அடிப்படையில் ஒன்றுபட வேண்டும் என்று அவர் பிராத்னை செய்தார்.