தொடரும் மத மாற்ற பிரச்சனைக்களுக்கு தேசிய பதிவு இலாகாதான் காரணம்

 

DAP-Nga-Zarinaஇந்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மத மாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் தேசிய பதிவு இலாகாதான் என்று கூறுகிறார் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம்.

“சமீபகாலத்தில் மதம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளும் பதற்றங்களும் ஏற்படுவதற்கு சில தரப்புகள், குறிப்பாக தேசிய பதிவு இலாகா, மலேசிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை மதித்து அவற்றை நிலைநிறுத்தாததுதான் காரணம்”, என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, முஸ்லிம் அல்லாத ஒருவர் எவ்விதப் பிரச்சனையும் இன்றி இஸ்லாத்திற்கு மதம் மாறலாம் மற்றும் அதிலிருந்து வெளியேறலாம். ஏனென்றால், தேசிய பதிவு இலாகா மதம் மாற விரும்புகிறவரின் நோக்கத்தைக் குறிப்பிடும் ஒரு சத்தியப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டது.

உண்மையில், அவ்வாறான மாற்றங்கள் அனுமதிக்கப்படுவது குறித்து தேசிய பதிவு இலாகா 30 ஆண்டுகளுக்கு முன்பு நாளிதழ்களில் விளம்பரம்கூட செய்துள்ளது.

“பின்னர், முஸ்லிம்களின் உணர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவ்வாறு விளம்பரம் செய்வது ஏற்புடையதல்ல என்று கூறப்பட்டது.

“அதன் பிறகு, ஒருவர் இஸ்லாத்தை விட்டு விலகி விட்டார் என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றை இஸ்லாமிய சமய மன்றம் அல்லது இஸ்லாமிய விவகார இலாகா வெளியிடும் என்றும் தேசிய பதிவு இலாகா சம்பந்தப்பட்டவரின் அடையாள அட்டையில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு அக்கடிதம் போதுமானது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது”, என்று இங்கே தெளிவுப்படுத்தினார்.

ஆனால், தேசிய பதிவு இலாகா கடினமான போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதோடு, இப்போது மதம் மாறியவர்கள் அதனை உறுதிப்படுத்தும் பிரகடனத்தை ஷரியா நீதிமன்றத்திடமிருந்து பெற்று வர வேண்டும் என்று கோருகிறது என்றாரவர்.

“அவ்வாறான கோரிக்கை அரசமைப்புச் சட்டம் 11(1) ஐ மீறுவதாகும் என்றும் அவர் கூறினார்.