சமயச்சார்பற்ற நாடல்ல என பண்டிகார் குறிப்பிட்டது வரம்புமீறிய கருத்தாகும்

kit singநேற்று நாடாளுமன்றத்தில்  ஒரு  தீர்மானத்தை  நிராகரித்தபோது  அவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா,  மலேசியா  சமயச்சார்பற்ற  நாடல்ல  எனக் கூறியது  “அதிகாரத்தைமீறிய”  பேச்சாகும்.

இவ்வாறு  குறிப்பிட்ட  கேளாங்  பாத்தா  எம்பி  லிம்  கிட்  சியாங்,  அவைத்  தலைவருக்கு  அரசமைப்பை  மீறும்  அதிகாரம்  கிடையாது  என்றார்.

ஒரு  பேச்சுக்காக  அப்படிக் கூறியதாக  பண்டிகார்  விளக்கமளித்தாலும் பல தரப்புகள்  இதையே  பிடித்துக்கொண்டு  மலேசியா  சமயசார்பற்ற  நாடல்ல  என்று  வாதிட  இடமளிக்கும்  என்று  லிம்  கூறினார்.

“மேலும்,  மலேசியா  சமயச்சார்பற்ற  நாடா,  இஸ்லாமிய  நாடா  என்ற  சூடான  விவகாரத்தில்  தமது  சொந்த  விளக்கத்தையோ தீர்ப்பையோ  அளிக்கும்  அதிகாரம்  அவைத்  தலைவருக்கு  இல்லை”.

பண்டிகார்,   பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோமை  உரிமைகள்  குழுவின்  விசாரணைக்கு  அனுப்புவதா,  வேண்டாமா  என்று  முடிவு  செய்வதுடன்  நிறுத்திக்  கொண்டிருக்க  வேண்டும்.  தம்  கருத்தைச் சொல்லி  இருக்கக்  கூடாது  என  லிம்  மேலும்  கூறினார்.