அன்வார்: மலேசியாவில் மதவெறி மனகலக்கத்தை உண்டுபண்ணுகிறது

anமலேசியாவில்  தலிபான்  ஆட்சி  அல்லது  அல்-கைதா  ஆட்சி  இல்லாமலிருக்கலாம்,  ஆனாலும்  “தீவிர மதவெறி”யைப்  பார்க்கையில்  “கிறுக்கு பிடித்துவிட்டதோ”  என எண்னத்  தோன்றுகிறது  என எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கூறினார்.

முஸ்லிமாக  மாறியவர்கள்  என்ற  ஐயத்தின்பேரில்  சீனரின்  சடலமொன்று  கவர்ந்து  செல்லப்பட்டதையும்  இந்து திருமணம்  நிறுத்தப்பட்டு  மணப்பெண்  சமய  அதிகாரிகளால்  அழைத்துச்  செல்லப்பட்டதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.

இஸ்லாமிய  வரலாறு  பயின்ற  தாம்  இஸ்லாமிய  சமுதாயங்களில் இப்படிப்பட்ட  சகிப்புத்தன்மையற்ற  சம்பவங்கள்  நடந்ததாகப்  படித்தது  இல்லை  என்றாரவர்.

“புக்கிட்  மெர்தாஜாமில்  சீனர்கள்,  இந்தியர்கள்  மத்தியில்  வாழ்ந்திருக்கிறேன்.  யாரும்  என்னிடம்  பன்றி இறைச்சியைக்  காண்பித்ததில்லை.  ஏனென்றால்,  அந்த  அளவுக்கு  எனக்கும்  என்  சமயத்துக்கும்  மரியாதை  கொடுத்தார்கள்”.  நேற்றிரவு  நிதி திரட்டும்  நிகழ்வு  ஒன்றில்  அன்வார்  இவ்வாறு  பேசினார்.