அண்மையக் காலமாக இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களை அவமானப்படுத்துதலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இது கவலைக்கிடமான செய்தி என வருத்தம் தெரிவித்தார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
கிள்ளான் உயர்நிலைப்பள்ளி மாணவர் தலைவர் நியமிக்கும் பிரச்சனைக்கடுத்து மறுபடியும் மற்றொரு விசித்திரமான வருந்தத்தக்க புகாரை தாம் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.
பள்ளியில் பயிலும் இந்திய பெண் மாணவிகளிடம் இந்திய கலாசாரமும் பழக்க வழக்கங்களும் பாலியல் பழக்கங்கள் கொண்டவை. கோவில்களில் உள்ள தெய்வப் படங்களும், பரதக்கலையும், வெங்காயம் உண்ணும் பழக்கமும் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் உள்ளன எனக் கூறி அம்மாணவிகளை அவமத்திதுள்ளார் டத்தோ ஹம்சா இடைநிலைப்பள்ளியின் ஓர் ஆசிரியை.
இவ்வாசிரியை கடந்த 4 – 5 ஆண்டுகளாக இந்திய மாணவிகளிடம் நாவு கூசாமல் இவ்வாறு கூறி வந்திருக்கின்றார் என பாதிக்கப் பட்ட மாணவிகளில் சிலர் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் தங்களது குமுறலைத் தெரிவித்தனர்.
இதனையறிந்த மற்றொரு மாணவி நியாயம் கேட்க சென்றபோது, அவ்வாசிரியையின் தத்து மாணவன் என கூறப்படும் ஆண் ஒருவர் மூலம் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனைச் சகித்துக் கொள்ள முடியாத மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி போலீஸ் புகார் செய்த பின்னர் பள்ளிக்கு கடிதம் அனுப்பி அவர்களது வருத்தத்தை பள்ளி தமையாசிரியையிடம் தெரிவித்த போது, பெற்றோர்களை அணுகி அப்பிரச்சனையைத் தீர்க்காமல் சம்பந்தப்பட்ட மாணவி ஒருவரை அந்த ஆசிரியை அச்சுறுத்தியுள்ளார்.
ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்ய விருப்பம் இல்லாத அம்மாணவி, பெற்றோர்களிடம் தொடர்புக் கொள்ளக் கூறியபோது, இதனால் அப்பள்ளியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பள்ளி பொறுப்பேற்காது என்று அம்மாணவியை அந்த ஆசிரியை அச்சுறுத்தியுள்ளார்.
பிரதமர் “ஒரே மலேசியா” கொள்கையை வலியுறுத்துகிறார். ஆனால் பல இடைநிலைப்பள்ளிகளில் இவ்வாறு செய்வதும், இந்திய மாணவர்களை அவமானப் படுத்துவதும், இந்து மதத்தையும் நம்பிக்கையும் கலாசாரத்தையும் இழிவுப் படுத்துவதும்தான் ஒரே மலேசியா கொள்கையா என பாதிக்கப் பட்ட மாணவர்கள் ஒருவரின் தந்தையான லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.
பள்ளி என்பது மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் கூடம். ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய இடம். மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டியது பள்ளி ஆசிரியர்களின், குறிப்பாக தலைமையாசிரியரின், கடமையாகும். பள்ளி மாணவர்களிடையே இன நல்லுறவை வளர்க்க வேண்டிய பள்ளியே மாணவர்களிடையே இன வேறுப்பாட்டை திணிப்பது கண்டிக்கத்தகது என சாடினார் சார்ல்ஸ்.
அவ்வாறு பாலியல் வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களை புண்படுத்திய ஆசியர்களை இடைநீக்கம் செய்வது மட்டுமில்லாது அவர்களுக்கு ஆலோசனையும் மறு பயிற்சி அளிக்க வேண்டும் என அவர்கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் கல்வி பயிற்சி முறை முழுமை பெறாததே இதற்கு காரணம் என சாடிய சார்ல்ஸ், இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்போவதாகக் கூறினார்.