ஏஜியின் நோக்கம்தான் என்ன?, கேட்கிறார் குலா

 

Kula shockedசமயங்கள் சம்பந்தப்பட்ட இரு பராமரிப்பு வழக்குகளில் குறுக்கீடு செய்ய தீர்மானித்துள்ள சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயிலின் நோக்கம் குறித்து இந்திரா காந்தியின் வழக்குரைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்கள் அளித்துள்ள பராமரிப்பு உத்தரவுகளை ரத்து செய்வதற்காகவும், இந்த விவாகரத்தை துரிதப்படுத்தும் பொருட்டு பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் இவ்வழக்குகளில் குறுக்கீடு செய்ய சட்டத்துறை தலைவர் எடுத்துள்ள முடிவு குறித்து தாம் “அதிர்ச்சி” அடைந்திருப்பதாக வழக்குரைஞர் மு. குலசேகரன் மலேசியாகினியிடம் கூறினார்.

“பிரதமர் இவ்வாறான எண்ணத்தை (பெடரல் நீதிமன்றம் சமயம் சம்பந்தப்பட்ட பராமரிப்பு போராட்டங்களை தீர்க்க வேண்டும்) கொண்டிருக்கிறார் என்பதாலா?”, என்று குலா வினவினார்.

சமயம் சம்பந்தப்பட்ட பராமரிப்பு போராட்டங்களில் உயர்நீதிமன்றமும் ஷரியா நீதிமன்றமும் முரண்பாடான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கையில் பெடரல் நீதிமன்றம் இதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் முன்பு கூறியிருந்தார்.

இந்திரா மற்றும் எஸ். தீபா சம்பந்தப்பட்ட இரு வழக்குகளிலும் அளிக்கப்பட்டுள்ள பராமரிப்பு மற்றும் மீட்பு உத்தரவுகளை ரத்து செய்யும் நடவடிக்கையை ஏஜி மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்திரா சம்பந்தப்பட்ட வழக்கில் அவரின் முன்னாள் கணவர் ரிட்ஸ்வான் அப்துல்லா, தம்பதியினரின் இளைய மகளை தாயாரிடம் ஒப்படைக்குமாறு இதற்கு முன்னதாக நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவை நிறைவேற்றாததால் அவரை கைது செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குலா மேலும் கூறினார்.

“இந்த வழக்கில் பராமரிப்பு உத்தரவு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது. இப்பிரச்சனை நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டு விட்டது. ஏன் ஏஜி இப்போது நடவடிக்கையில் இறங்கிறார்”, என்று குலா வினவுகிறார்.

“ஏஜி அலுவலகம் கொடூரமாகப் போராடியது”

2010 ஆம் ஆண்டில் அவரது முன்னாள் கணவர் ஒருதலைப்பட்சமாக அவர்களது இரு குழந்தைகளை மதமாற்றம் செய்தார். அதனை செல்லத்தகாததாக்க இந்திரா நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அந்த விவகாரம் பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கு ஏஜி அலுவலகம் “கொடூரமாகப் போராடியது”, என்று குலா தெரிவித்தார்.

“எனது கட்சிக்காரரின் ஆலோசனையை பெறுவதுடன் ஏஜியின் மனுவை எதிர்பார்த்து மன எழுச்சியுடன் காத்திருப்பேன்:, என்றார் குலா.

சிவில் நீதிமன்றம் முஸ்லிம் அல்லாதவரின் உரிமைகளை பாதுகாக்கிறது

எஸ். தீபாவின் வழக்குரைஞர் ஜோனே லியோங் ஏஜியின்”குறுக்கீடு “தேவையற்றது” ஏனென்றால் இதற்கு முன்பு உயர்நீதிமன்றம் இதுபோன்ற பல வழக்குகளைக் கையாண்டுள்ளது என்றார்.

“இந்த விவகாரத்தில் இந்த வழக்குகள் மட்டுமல்ல. ஏராளமான வழக்குகள் நம் முன் இருந்துள்ளன. அவற்றை சிவில் நீதிமன்றங்கள் தீர்த்துள்ளன”, என்றாரவர்.

“சிவில் நீதிமன்றம் முஸ்லிம் அல்லாதவரின் உரிமைகளைப் பாதுகாக்கிறது”, என்று அவர் மேலும் கூறினார்.