‘கைதான சூலுக்களில் மலேசிய போலீஸ்காரரும் இருப்பது ஆபத்தின் அறிகுறி’

bumசூலு  பயங்கரவாதி  என்ற  சந்தேகத்தின்பேரில்  மலேசிய  போலீஸ்காரர்  ஒருவர்  கைது செய்யப்பட்டிருப்பது  சட்டவிரோத  குடியேறிகள்  பாதுகாப்புப்  படைகளிலும்  ஊடுருவி  இருப்பதைக் காட்டுவதாக  தம்பருலி  சட்டமன்ற  உறுப்பினர்  வில்ப்ரெட்  பும்புரிங் கூறியுள்ளார்.

கைதானவரின்  பின்னணியை  போலீசார்  தெரிவிக்க  வேண்டும்  என்றவர்  கேட்டுக்கொண்டார்.

புதன்கிழமை  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்,  பிப்ரவரியில்  நிகழ்ந்த  லாஹாட்  டத்து  ஊடுருவல்  தொடர்பில்  சூலு  பயங்கரவாதிகள்  என்ற  சந்தேகத்தில்  போலீசார்  அறுவரைக்  கைது  செய்திருப்பதாக   அறிவித்திருந்தார்.

அவர்களில் ஒருவர்  மலேசியர், போலீஸ்  படையில்  கார்ப்பரலாக  இருப்பவர்  என்றும்  அவர்  தெரிவித்திருந்தார்.

“கார்ப்பரல்  கைது  என்பது  பனிப்பாறையின்  நுனிப்  பகுதி  மட்டுமே.

“சாபாவில்  சட்டவிரோத  குடியேறிகள்  இலட்சக்  கணக்கில்  இருப்பது  சாபாவை  எதிர்நோக்கும்  மிகப்  பெரிய  அபாயமாகும்”, என்று  பும்புரிங்  சொன்னார்.

சட்டவிரோத  குடியேறிகள்  பிரச்னைக்குத்  தீர்வு  காண  வேண்டும்  என்ற  சாபா  மக்கள்  அரசாங்கத்துக்கு  விடுத்த  வேண்டுகோள்  எல்லாம் “செவிடன்  காதில்  ஊதிய  சங்குபோல்  ஆனது”,  என்றவர்  வருத்தப்பட்டார்.