ஐஜிபி, ஏஜி செயல்களால் கடுப்பானார் கெராக்கான் தலைவர்

baljitபோலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரால்  சட்டத்தைச்  செயல்படுத்தும்  வேலையைச்  செய்ய  முடியவில்லை  என்றால்  அவருக்கு  “வெளியேறும்  வாசலை”க்  காண்பிக்க  வேண்டும்  என  கெராக்கானின்  சட்ட, மனித  உரிமை  விவகாரப்  பிரிவுத்  தலைவர்  பல்ஜிட்  சிங்  கூறினார்.

“காலிட்  பதவி  விலக  வேண்டும். அவரால்  கடமையைச்  செய்ய இயலவில்லை  என்றால்  அதை  வேறொருவரிடம்  ஒப்படைக்க வேண்டும்”, என்றாரவர்.

எம். இந்திரா  காந்தியின்  குழந்தையை நீதிமன்ற  ஆணைப்படி அவரிடம்  ஒப்படைக்க  மறுக்கும்  முன்னாள்  கணவரைக்  கைது  செய்யப்போவதில்லை  என்று  காலிட்  கூறி  இருப்பது குறித்து  பல்ஜிட்  இவ்வாறு  கருத்துரைத்தார்.

அதே  வேளையில், குழந்தை  பராமரிப்பு  விவகாரத்தில்  சிவில்  மற்றும்  ஷியாரியா  நீதிமன்ற  உத்தரவுகளை இரத்து  செய்ய  முனைந்துள்ள  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) அப்துல்  கனி  பட்டேயிலின்  நடவடிக்கை  குறித்தும்  அவர்  கேள்வி  எழுப்பினார்.

“அவர்  காலிட்டை  நீதிமன்றத்தை  அவமதித்த  குற்றத்திலிருந்து  காப்பாற்றப்  பார்க்கிறாரா?.  இதுவா  அவரது  வேலை?”,  என  பல்ஜிட்  வினவினார்.