தூதரக அதிகாரிமீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உறவுகள் பாதிப்புறும்: மலேசியாவுக்கு நியு சிலாந்து எச்சரிக்கை

nzவெல்லிங்டனில் ஒரு  பெண்ணுடன்  வன்புணர்வு  கொள்ள  முயன்றதாகக்  குற்றம்சாட்டப்பட்டிருக்கும்  மலேசிய  தூதரக  அதிகாரிமீது  சட்ட  நடவடிக்கை  எடுக்காவிட்டால்  இரு  நாடுகளின்  உறவுகள்  பாதிக்கப்படும்  என  நியு  சிலாந்து  வெளியுறவு  அமைச்சர்  முர்ரே  மெக்கல்லி  கடும் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

இப்போது  மலேசியா  திரும்பிவிட்ட  அந்த  அதிகாரி  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவது  அவசியம்  என்ற  நியு  சிலாந்தின்  விருப்பத்தை  வெளிவிவகார, வர்த்தக  அமைச்சின்  அதிகாரிகள்  மலேசிய  அரசாங்கத்துக்குத்  தெளிவாகவே  எடுத்துச்  சொல்லி  இருப்பதாக  மெக்கல்லி  கூறினார்.

இவ்விவகாரம்  தொடர்பில்  மலேசிய  வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்  இன்று  பிற்பகல்  செய்தியாளர்  கூட்டம்  ஒன்றை  நடத்துகிறார்.

அத்தூதரக  அதிகாரியை  விஸ்மா புத்ரா  பாதுகாக்கவில்லை  என்பதை  அவர்  வலியுறுத்தினார்.

“தூதரக  அதிகாரி  என்பதை வைத்து  யாரும்  தப்பித்துக்கொள்ள  இயலாது. தூதரக  அதிகாரிக்கான  சலுகை  குற்றம்  இழைப்பதற்கான  லைசென்ஸ் அல்ல”,  என்றாரவர்.