“துணைப் பிரதமர் மறைமுகமாக ஒரு சிறுவன் அவதூறுக்கு இலக்காவதை ஆதரிக்கிறார்”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் 16 வயது புதல்வனை அவமானப்படுத்தி அழிப்பதற்கு அம்னோ வலைப்பதிவாளர்களுக்கு துணைப் பிரதமர் “மறைமுகமாக ஆதரவு வழங்குகிறார்” என டிஏபி தேசியப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா சாடியுள்ளார்.

அதனால் துணைப் பிரதமரை பிரதமர் நஜிப் கண்டிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

“பினாங்கு  முதலமைச்சர் குடும்பத்திற்கு எதிராக அபாண்டமான பொய்களை அவிழ்த்து விடுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அவர்கள் அனைவரும் அம்னோ தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பதால் துணைப் பிரதமர் முஹைடின் பாதுக்காக்கக் கூடாதவர்களை தற்காக்க முடிவு செய்துள்ளார்,” என புவா விடுத்த அறிக்கை இன்று கூறியது.

அரசாங்கத்தின் தோற்றத்தை பாதுகாக்கும் பொருட்டு, லிம்-மின் இளம் வயது புதல்வனுக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்களை கூறுவதை நிறுத்திக் கொள்ளுமாறு நஜிப், தமது துணைப் பிரதமரையும்  அம்னோ உறுப்பினர்களையும் கண்டித்து வைக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“வெறும் மறுப்பு மட்டும் போதாது. தவறு என்றால் விஷயங்களை விசாரித்து தெளிவுபடுத்துமாறு போலீசாரைக் கேட்டுக் கொள்ள வேண்டும்” என முஹைடின் கூறியதாக நேற்று பெர்னாமா தகவல் வெளியிட்டிருந்தது.

துணைப் பிரதமரது கருத்துக்களை லிம்-மும் இன்று காலை விடுத்த அறிக்கையில் கண்டித்துள்ளார்.

“பாதிக்கப்பட்டதாக” கூறப்பட்ட மாது என்னையோ என் புதல்வனையோ சந்திக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். அத்துடன் அத்தகைய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பினாங்கு கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது தவறான நடத்தையில் என் புதல்வன் சம்பந்தப்பட்டுள்ளானா இல்லையா என்ற கேள்வியையும் என் புதல்வனுக்கு எதிராக பொய்களையும் மீண்டும் கூறுவதற்கும்  அம்னோ வலைப்பதிவாளர்களை அனுமதிக்கும் வகையில் இவ்வளவு கொடூரமாக முஹைடின் எப்படி நடந்து கொள்ள முடியும்?” என அவர் இன்று காலை விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.