கர்பால்: “முதலமைச்சர் கம்போங் புவா பாலா விவகாரத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கக் கூடும்”

2009ம் ஆண்டு கம்போங் புவா பாலா கிராமத்தை அதன் குடியிருப்பளர்கள் காலி செய்ய வேண்டும் எனக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீறியிருந்தால் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கூறுகிறார்.

கூட்டரசு நீதிமன்றம், கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து அந்த இடத்தை மறுமேம்பாடு செய்வதற்கு அனுமதி பெற்றுள்ள மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 24ம் தேதி வழங்கிய தீர்ப்பை ஆகஸ்ட் மாதம் மறு உறுதிப்படுத்தியது.

அந்த முடிவு காரணமாக- என்ன விலை கொடுத்தாவது அந்தக் கிராமத்தைக் காப்பாற்றப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் அந்தக் கிராம மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது என்பதை கர்பால் ஒப்புக் கொண்டார்.

“பலர் கேட்கின்றனர்.. வாக்குறுதிகள் என்னவாயின? கடைசி வரை கிராமத்தை நாங்கள் தற்காப்போம் என லிம் சொன்னது எங்கே போனது? ஆம். நாங்கள் அனைவரும் சொன்னது அதுதான்”, என அந்த மூத்த வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

“ஆனால் நீதிமன்ற ஆணையை மீறாமல் இருப்பதற்கு முதலமைச்சருக்கு என்ன மாற்று வழி தான் இருந்தது? மக்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் என்னும் முறையில் நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ நீதிமன்ற முடிவுக்குக் கீழ்ப் படிய வேண்டும்”, என டிஏபி தேசியத் தலைவருமான கர்பால் சொன்னார்.

“நீதிமன்றத்தை அவமதித்தால் நீங்கள் அந்த அவமதிப்பை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் வரை நீங்கள் ஜெயிலில் அடைக்கப்படுவது மட்டுமின்றி மாநில அரசாங்கமும் நீக்கப்பட்டிருக்கக் கூடும்”, என்றார் அவர்.

கர்பால் இன்று முன்னாள் கம்போங் புவா பாலா மக்களுக்கு வீட்டுச் சாவிகளை வழங்கும் சடங்கில் உரையாற்றினார்.

மேம்பாட்டு நிறுவனமான நுஸ்மெட்ரோ சென் பெர்ஹாட் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் லிம், துணை முதலமைச்சர் ll பி ராமசாமி, பத்து மாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் அப்துல் காசிம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மொத்தம் 24 குடும்பங்களுக்கு அந்த நிகழ்வின் போது வீடுகள் வழங்கப்பட்டன.