அம்பிகா, சாமாட் தலைமையில் நாட்டை புணரமைக்க நெகாரா-கு மக்கள் இயக்கம்

 

ngoஇன மற்றும் இனவாத சர்ச்சைகள் மலேசிய பல்லின மக்களுக்கிடையில் இதுவரையில் நிலவிய வந்த அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பெரும் மிரட்டலை உருவாக்கி வரும் இக்காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, ஆளுமை அளித்து நாட்டை புணரமைக்கும் நோக்கத்தைக் கொண்ட ஒரு மக்கள் இயக்கம் பெர்சேயின் முன்னாள் கூட்டு தலைவர்களான அம்பிகா மற்றும் சாமாட் தலைமையில் நேற்று கோலாலம்பூரில் “நெகாரா-கு” என்ற மக்கள் இயக்கம் தொடக்கம் கண்டது.

“தீவிரவாதம் மற்றும் இனவாதம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருக்கும் நமது நாட்டை புணரமைப்பு செய்யும் நம்பிக்கையை நெகாரா-கு கொண்டுள்ளது. தீவிரவாதமும் இனவாதமும் வளர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன”, என்று நெகாரா-குவை அறிமுகம் செய்வதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அம்பிகா கூறினார்.

இப்புதிய இயக்கத்தில் தற்போது 68 சிவில் அமைப்புகளும் அரசுசார்பற்ற அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

இப்போது சமயம் அடையாளத்தைக் குறியிடும் கருவியாக பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டிய பாக் சாமாட் ஸைட், அது மக்களை இரு வேறுபட்ட கோட்பாடுகளைக் கொண்டவர்களாக பிரித்து நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இன மற்றும் சமய அடிப்படையில் மக்களை திரட்டுவதும், உண்மையைத் திரித்துக்கூறுவதும் சகிப்புத்தன்மை, மத, இன வெறி மற்றும் தீவிரவாதம் ஆகியவை வளர்வதற்கு வழிவகுத்துள்ளது என்பதோடு அரசியல் வன்முறை கலாச்சாரமும் வளர்ந்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“நெகாரா-கு அரசியல் பற்றியதல்ல. ஆனால், அது சாதாரண மலேசியர்கள் இதற்கு மேலும் பொறுத்துக்கொள்வதற்கில்லை என்று கூறுவது பற்றியதாகும்”, என்று அம்பிகா இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை விளக்கினார்.

நமது நாட்டின் ஆட்சி முறை மீண்டும் அடிப்படையை உள்ளடக்கியுள்ள மூன்று ஆவணங்கள் – பெடரல் அரசமைப்புச் சட்டம், மலேசியா ஒப்பந்தம் 1963 மற்றும் ருக்குன்நெகரா – பக்கம் திரும்ப வேண்டும் என்பது நெகாரா-கு இயக்கத்தின் விருப்பமாகும் என்றாரவர்.

தேவையான தகவல்களோடு நாடு முழுவதும் சென்று இந்த இயக்கத்தின் நோக்கத்தை மக்கள் முன்வைப்போம். இது மலேசிய மக்களுக்கு தீவிரவாதம் மற்றும் இனவாதம் ஆகியவை வேண்டாம் என்பதை இதன்பால் ஈடுபாடு கொண்டவர்களுக்கு புரிய வைக்கும் என்று அம்பிகா நம்பிக்கை தெரிவித்தார்.

நெகாரா-கு இயக்கத்தின் கொள்கை அறிக்கை மலாய், சீனம், தமிழ், கடாஸான், டூசுன் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடப்பட்டது.