போலீஸ் அதிகாரி மீது பாலியல் குற்றம் சாட்டிய சஞ்சீவன் விசாரிக்கப்படுகிறார்

 

Sanjeevanகுற்ற எதிர்ப்பு அரசு சார்பற்ற அமைப்பான மைவாச் (MyWatch) தலைவர் ஆர். சஞ்சீவன் பெயரிடப்படாத ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் (ஆட்சியாளரிடமிருந்து சிறப்புமிக்க பட்டமும் பெற்றுள்ளவர்) மீது சாட்டிய பாலியல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டிற்காக போலீசாரால் தாம் விசாரிக்கப்படுவதாக கூறுகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் (ஒழுங்கு நடவடிக்கை இலாகா) கடந்த செவ்வாய்க்கிழமை தமக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் விசாரணையை மேற்கொள்வதற்கு வசதியாக தாம் கூறியுள்ள புகார்கள் சம்பந்தப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் அடுத்த 14 நாள்களுக்குள் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக சஞ்சீவன் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“ஏன் (குற்றம் புரிந்துள்ளதாக கூறப்பட்டவரை) விசாரிக்காமல், மாறாக ஏன் என்னை விசாரிக்க வேண்டும்?, என்று சஞ்சீவன் வினவினார்.

சஞ்சீவனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் அந்த விவகாரம் கிரிமினல் குற்றத் தொகுப்பு செக்சன் 509 மற்றும் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998, செக்சன் 233 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம் அந்த போலீஸ் அதிகாரியின் பாலியல் விவகாரத்தை மூடிமறைப்பதாகும் என்பதோடு எனக்கு அத்தகவலை அளித்தவரை கண்டுபிடிப்பதுமாகும் என்றார் சஞ்சீவன்.

“நான் அந்த பாலியல் விவகாரம் குறித்த அனைத்து ஆவணச் சாட்சியங்களியும் போலீசாரிடம் கொடுத்தால், அவை அழிக்கப்படும் என்பதோடு பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முன்பு நடந்துள்ளது போல் இவ்வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை இல்லை என்று வகைப்படுத்தப்படும்”, என்று சஞ்சீவன் மேலும் கூறினார்.

இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப்பும் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியும் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் சஞ்சீவன் கூறினார்.