சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மீதான விசாரணையை அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் முடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அந்தப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள நடவடிக்கை மீது பொது மக்கள் கருத்துக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
“அவர் (அஜிஸ்) சொன்னதின் அர்த்தம் என்ன என்பதை விசாரணை கண்டு பிடிக்கும். ஆகவே முன் கூட்டியே கருத்துச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் தேவாலயம் ஒன்றில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை மேற்கொண்ட சோதனை தொடர்பில் சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட ஆணை மீது சொன்ன கருத்துக்களுக்காக அஜிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
என்றாலும் அஜிஸ் தமது கடமைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுவது “தவறான புரிந்துணர்வு” எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
“எனக்கு தெரிந்த வரை அது இடைநீக்கம் அல்ல. விசாரணைக்காக இடைநீக்கமே அது, கடமைகளிலிருந்து இடைநீக்கம் அல்ல. கடமைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவது அவர் கொடுக்கும் பதிலைப் பொறுத்துள்ளது.”
“அந்த பல்கலைக்கழக தலைவர் என்னிடம் கூறியபடி, அந்த விவகாரம் இன்னும் விசாரணை கட்டத்திலேயே இருக்கிறது. அவருக்குப் பதில் கொடுப்பதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கடமைகளிலிருந்து இடைநீக்கம் அல்ல. அது தவறான புரிந்துணர்வு ஆகும்.”