கோபிந் சிங்: காலணியை வீசிய ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

Gobindth Singhநெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரு தொடக்கப்பள்ளி மாணவி மீது தமது காலணியை வீசி அம்மாணவிக்கு காயம் விளைவித்தாக கூறப்படும் ஆசிரியர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அந்த இளம் மாணவியை வேண்டுமென்றே தாக்கியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று பூச்சோங் நடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் கூறினார்.

“சட்டம் தெளிவாக இருக்கிறது. அந்த (காலணியை எறிந்தது) வேண்டுமென்றே நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட காயம் குற்றவியல் தொகுப்பின் கீழ் ஒரு குற்றமாகும்”, என்று அவர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை போர்ட்டிக்சனில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடந்தது. ஆசிரியர் விட்டெறிந்த அவரின் காலணியால் எம்.சார்மினி என்ற எட்டு வயது மாணவியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதற்கு மூன்று தையல்கள் போட வேண்டியதாயிற்று.

சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் இது குறித்த விசாரணை முடியும் வரையில் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக துணை கல்வி அமைச்சர் பி. கமலநாதன் நேற்று கூறினார்.

ஆனால், கூறப்பட்டுள்ள இக்குற்றம் ஒரு கடுமையானது என்பதால் இடமாற்றமும் காரணம் கோரும் கடிதமும் போதுமானதல்ல. அதனால் அது தண்டிக்கப்படால் விட்டு விடக்கூடாது என்று கோபிந்த் மேலும் கூறினார்.

“நடந்துள்ளது ஒரு கடுமையான விவகாரமாகும். தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் பத்திரமாக இருப்பார்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிகையில் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்”, என்றாரவர்.

விசாரணையின் மூலம் ஆசிரியர் குற்றம் புரிந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், சட்டத்துறை தலைவர் தாமாகவே முன்வந்து அந்த ஆசிரியருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்பட்டுத்த வேண்டும் என்றும் கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டார்.