நாடற்ற இந்தியர்கள், இந்திய சமூகம் மீதான சிறப்பு அமலாக்கப் பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில் பதிந்துகொள்ளுமாறு மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக்கொண்டிருப்பதை எதிரணி எம்பி ஒருவர் சாடியுள்ளார்.
மலேசிய அடையாள அட்டை(மைகாட்) இல்லாதிருக்கும் இந்தியர்களுக்கு மைகாட் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு ஏற்கனவே இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையும் அது அதைச் செய்யத் தவறியதையும் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலாக, அரசாங்கம் தேசிய பதிவுத் துறை(என்ஆர்டி)யிடமே இப்பணியைக் கொடுப்பது நல்லது என்றாரவர்.
“அதற்கான நிதி வசதியும் ஆள்வசதியும் என்ஆர்டி-இடம் உள்ளன. எதற்காக, பிஎன் அரசாங்கம் கையாலாகாத எஸ்ஐடிஎப்- இடம் இந்த முக்கியமான பொறுப்பைக் கொடுக்க வேண்டும்?”, என்று சுரேந்திரன் வினவினார்.