தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வமான நெஸாவின் சிலை உடைக்கப்பட்டது

 

TEMPLE Downஜொகூர், கம்போங் தெம்பியோவில் அமைந்திருந்த சீன தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வம் என்ற நெஸாவின் 10 மீட்டருக்கும் கூடுதலான உயரமும் 38 டன் எடையும் கொண்ட சிலை கோட்டா திங்கி அம்னோ இளைஞர் பிரிவு தெரிவித்த அதிருப்தியைத் தொடர்ந்து நேற்று உடைக்கப்பட்டது.

அச்சிலை அமைந்திருந்த கோயில் அங்குள்ள சூராவுக்கு 50 மீட்டர் தூரத்தில் இருந்ததே காரணம் என்று கோட்டா திங்கி அம்னோ இளைஞர் பிரிவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

“அச்சிலையை நாங்கள் எடுத்தாக வேண்டியிருந்தது குறித்து வருத்தமடைகிறோம்”, என்று அக்கோயில் நிறுவனர் கோ சின் கோக், 53, கூறினார்.

“அச்சிலையை உருவாக்குவதற்கு நாங்கள் மூன்று முறை சீனா, குவான்ஸாவுக்கு சென்றோம். அதனை இரண்டு கொள்கலன்களில் ஏற்றி கோட்டா திங்கிக்கு கொண்டுவரப்பட்டது.

“நாங்கள் அதற்காக சுமார் ரிம500,000 செலவிட்டோம்”, என்று கோ மலேசியாகினியிடம் கூறினார்.

ஆனால், இது இனப் பிரச்சனையாக மாறக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கோட்டா திங்கி அம்னோ இளைஞர் பிரிவின் நிலை குறித்து கோ கருத்துரைக்க மறுத்து விட்டார்.

கோயில் ஊராட்சி மன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு மனு செய்யவில்லை என்பதை கோ ஒப்புக்கொண்டார்.

“அச்சிலையை மீண்டும் நிறுவதற்கு ஊராட்சி மன்றத்தின் ஒப்புதலுக்கு மனு செய்யும் திட்டத்தை கொண்டிருக்கிறோம்”, என்றும் அவர் கூறினார்.

கம்போங் தெம்பியோவில் அக்கோயில் முதலில் 1947 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் அது மறுநிர்மாணிப்பு செய்யப்பட்டது.

இக்கற்சிலையை கட்டுவதற்கு கோயில் இவ்வாண்டு தொடக்கத்தில் நிதி திரட்டியது. கடந்த மாதம் நிர்மாணிப்பு வேலை முடிவுற்றது.

கட்டுமான பணியை நிறுத்த உத்தரவு

TEMPLE Down1கடந்த மாதம் அம்னோ இளைஞர் தொகுதி இச்சிலையில் படத்தை ஓன்லைனில் கண்ட பிறகு போலீஸ் புகார் ஒன்றை செய்ததாக கூறப்பட்டது.

கோட்டா திங்கி மாவட்ட அதிகாரி கட்டுமான பணியை நிறுத்துமாறு கோயிலுக்கு தேசிய நில சட்டத்தின் கீழ் இரு உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

மேலும், கோயில் சாலை, வடிகால் மற்றும் கட்டடம் சட்டம் 1974 செக்சன் 133 ஐ மீறியுள்ளதாகவும் ஊராட்சிமன்றத்தினர் கூறிக்கொண்டனர்.

இதற்கு முன்னதாக, ஜொகூர் சுல்தானுடன் நடந்த ஒரு சந்திப்பில் கோயில் நிருவாகத்தினர் அச்சிலையை எடுத்து விடுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்று கோட்டா திங்கி மாவட்ட அதிகாரி முகமட் நூர்அஸாம் ஓஸ்மான் கூறியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டிருந்தது.

நேற்று தொடங்கிய அச்சிலை உடைப்பு மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் முடிவுற்றது.

தாவோ சமய பாதுகாப்பு தெய்வமான நெஸா சீன மலேசியர்களிடையில் பிரசித்தி பெற்றதாகும்.