போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், எரிபொருளை மிச்சப்படுத்தவே எம்எச் 17 தென்கிழக்கு யுக்ரேய்னுக்கு உயரே பறந்ததாகக் கூறப்படுவதை மறுத்தார்.
“அது உண்மையல்ல. பல ஆண்டுகளாக எம்ஏஎஸ் அப்பாதையைத்தான் பயன்படுத்தி வந்துள்ளது. பல நாடுகள் அதே பாதையைத்தான் பயன்படுத்துகின்றன”, என இன்று செப்பாங்கில் சமா சமா ஹோட்டலில் செய்தியாளர் கூட்டமொன்றில் அமைச்சர் தெரிவித்தார்.
“அந்த நேரத்தில்கூட பல விமானங்கள் அந்தப் பாதையில் பறந்து கொண்டிருந்தன”, என்றாரவர்.
ஆபத்து நிரம்பியது எனத் தெரிந்தாலும், விரைவாக செல்லலாம், எரிபொருளை மிச்சப்படுத்தலாம் என்பதால் பல நிறுவனங்கள் அந்தப் பாதையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டிருப்பது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது லியோ அவ்வாறு கூறினார்.
அனைத்துலக சிவில் விமான நிறுவனம் (ஐசிஏஓ) அதைப் பாதுகாப்பான பாதை என்று அறிவித்திருப்பதாகவும் அதைப் பயன்படுத்தக்கூடாது என எம்ஏஎஸ்-சுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் லியோ வலியுறுத்தினார்.
எம்எச் 47 சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்துக்குப் பின்னரே ஐசிஏஓ அப்பாதையை மூடியதாகவும் அவர் சொன்னார்.