எம்எச்17: நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறார் நஜிப்

 

Najib-MH17கிழக்கு உக்ரேய்னில் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுவது சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தை  நடத்த தீர்மானித்திருப்பதாக பிரதமர் நஜிப் இன்றிரவு கூறினார்.

இன்றிரவிலிருந்து திங்கள்கிழமை வரையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் பிரதமர் நஜிப் அறிவித்தார்.

மாஸ் விமானத்தின் மீது தொடுக்கப்பட்ட  தாக்குதல் “மனிதத்தன்மையற்றது, அநாகரிகமானது, வன்முறையானது மற்றும் பொறுப்பற்றது” என்று நஜிப் கூறினார். ஆனால், இத்தாக்குதல் குறித்த முழு சாட்சியங்களும் கிடைக்கும் வரையில் எவர்மீதும் குற்றம் சாட்டப்படாது என்றாரவர்.

“மலேசிய மக்களின் ஓர் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தி, இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிப்பதற்காக நான் பிரதமர் என்ற முறையில் நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளேன்”, என்று நஜிப் டிவி1 இல் இன்று நாட்டிற்கு விடுத்த செய்தியில் கூறினார்.