மதம் மாற்ற எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டு நேற்று முன் தினம் ஹிம்புன் பேரணியை ஒழுங்காக நடத்தியதாக அதன் ஏற்பாட்டாளர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாராட்டியுள்ளார்.
அது, ஜுலை 9ம் தேதி நடத்தப்பட்ட தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கான பெர்சே 2.0 பேரணியுடன் ஒப்பிடும் போது பெருத்த வேறுபாடாக இருப்பதாக அவர் சொன்னார்.
பெர்சே 2.0 பேரணியின் போது ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டன.
“அவர்கள் கூடுவதற்கு ஒர் அரங்கத்தை வழங்க நான் முன் வந்தததின் அர்த்தம் அது தான்,” என அவர் நேற்று கோலாலம்பூரில் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை பாராட்டும் சடங்கிற்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“ஹிம்புன் நிகழ்வை பெர்சே 2.0 நிகழ்வின் போது ஏற்பட்ட குழப்பத்துடன் ஒப்பிடும் போது பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஹிம்புன் பேரணியால் யாருக்கும் தொந்தரவு இல்லை. யாரும் நெருக்கப்படவில்லை.பாதுகாப்பற்ற உணர்வையும் பெறவில்லை.”
அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு கூடுதல் இடம் அளிக்கும் வகையில் போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவைத் திருத்தும் தமது சீர்திருத்த முயற்சிகளின் பிரதிபலிப்பாக அந்த பேரணி திகழ்ந்தது என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
“முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி அவர்களுடைய சமயத்தைத் தற்காக்குமாறு” வலியுறுத்தும் நோக்கத்துடன் ஷா அலாம் அரங்கில் சனிக் கிழமை நடத்தப்பட்ட ஹிம்புன் பேரணியில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
‘மதம் மாற்றத் தடுப்புச் சட்டம் மாநிலங்களைப் பொறுத்தது’
அந்த ஹிம்புன் பேரணி 10 அம்சத் தீர்மானத்துடன் நிறைவடைந்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை மதம் மாறச் செய்வதை தடுப்பதற்கு புதிய சட்டம் வரையப்பட வேண்டும் என்பதும் அதில் ஒன்றாகும்.
அது குறித்து கருத்துரைக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், அத்தகைய சட்டங்கள் மாநில அரசாங்க அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றார். ஆகவே அவற்றை வரைவது மாநில அரசாங்கங்களைப் பொறுத்ததாகும்.
“அந்த விஷயம் மீது மாநிலங்கள் முழு அதிகாரத்தைப் பெற்றுள்ளன. எனவே அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது மாநிலத்தைப் பொறுத்தது. மாநில அதிகாரிகள் அது குறித்து நிச்சயம் கவனம் செலுத்துவர் என நான் நம்புகிறேன்.”
முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்பட்ட டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஹிம்புன் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
அந்த விசாரணையைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்கள் மீது வழக்குப் போடுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் மதம் மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தன என்றும் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா பிரகடனம் செய்தார்.