ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் கடும் சண்டை மூண்டதால் அங்கு ஆய்வுப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியைச் சுற்றிலும் ஐந்து இடங்களில் உக்ரேன் படையினருக்கும் ரஷ்ய- ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்குமிடையில் நிகழ்ந்த மோதல்களில் குறைந்தது 13பேர் கொல்லப்பட்டனர்.
அப்பகுதிக்குச் சென்று வருவதற்கு வசதிசெய்துத்தர கிளர்ச்சிப்படையினர் ஒப்புக் கொண்டிருப்பதாக மலேசியா கூறினாலும், அங்கு செல்வது பாதுகாப்பானதல்ல என்றே அனைத்துலக கண்காணிப்பாளர்கள் நினைக்கிறார்கள். அதனால், அப்பகுதிக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
அப்பகுதியில் சண்டை நடப்பதாகக் கூறப்படுவதை உக்ரேன் மறுத்தது. கண்காணிப்பாளர்களின் பணியைத் தடுத்து நிறுத்த கிளர்ச்சிப்படையினர் அப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள் என்று அது கூறியது.