மதமாற்ற- எதிர்ப்புச் சட்டப் பரிந்துரையை அரசு ஆராய்கிறது

முஸ்லிம்களை மதமாற்றம் செய்வோரைத் தண்டிக்க  புதிய சட்டம் வரையப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஆராய்ந்து வருவதாக பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் கூறுகிறார்.

“அதில் கூட்டரசு மற்றும் மாநிலச் சட்டங்கள் சம்பந்தப்படுவதால் நன்கு ஆராய வேண்டியுள்ளது”, என்று அவர் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் கூறியது.

மத்தியிலும் மாநில அளவிலும் அரசமைப்புத் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது அவை ஒன்று மற்றொன்றுடன் முரண்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள நன்கு ஆராய வேண்டியிருக்கும் என்றவர் சொன்னார்.

ஷா ஆலம் ஸ்டேடியத்தில், சுமார் ஐயாயிரம் பேர் கலந்துகொண்ட மதமாற்ற-எதிர்ப்புப் பேரணி நடைபெற்று இரண்டு நாள்கள் ஆகின்ற வேளையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

மலேசியாவை “கிறிஸ்துவமயமாக்கும்” முயற்சி நடப்பதாக சர்ச்சை மூண்டதை அடுத்து அப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

ஆகஸ்ட் 3-ல், டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் ஹராபான் கம்யுனிடி என்னும் அரசு சார அமைப்பு நடத்திய நன்றி நவிலும் விருந்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை (ஜயிஸ்) ஓர் அதிரடிச் சோதனையை நடத்தியது.

அவ்விருந்தில் முஸ்லிம்கள் மதம் மாற்றப்படுவதாகக் கேள்விப்பட்டு அச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அது கூறிக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் சுல்தான் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் அவர், அவ்விருந்தில் கலந்துகொண்ட 12 முஸ்லிம்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் எனவே அவர்களுக்கு மதியுரை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.