வல்லினத்தின் குறும்படப் பட்டறை

SF 326.7.2014ல் வல்லினம் ஏற்பாட்டில் குறும்படப்பட்டறை ஒன்று கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. இந்தப் பட்டறையை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாள் மற்றும் செந்தில் குமார் முனியாண்டி ஆகியோர் வழிநடத்தினர்.

நாட்டில் குறும்படப்போட்டிகள்  அதிகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் , குறும்படத்துக்கான அடிப்படை தேவை குறித்து இப்பட்டறை விவாதித்தது. கருவிகளும், அதன் பயன்பாடு மட்டுமே கலையாவதில்லை என்பதை விரிவாக விளக்கிய இயக்குனர் சஞ்சை, கதை எவ்வாறு திறம்பட உருவாக்கப் பட வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்தார்.

தமிழகத்தில் உள்ளது போல குறும்படங்கள் முழுநீள படங்களின் சுருக்கம் இல்லை என விளக்கிய அவர், அது வாழ்வின் மிக நுட்பமான ஒரு தருணத்தைப் பதிவு செய்ய பயன்படும் கலை வடிவம் என விளக்கினார்.

SF 2ஒளிப்பதிவாளர் செந்தில்  தொழில்நுட்பம் குறித்த தனது அனுபவங்களை முன் வைத்துப் பேசினார். அதோடு, ‘ஜெராந்துட் நினைவுகள்’ என்ற தனது தொடர் நாடகம் குறித்தும் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். புறத்தில் அப்படம் ஒரு மோட்டார் வாகன போட்டியைப் பற்றி பேசுவது போல தோன்றினாலும் அதன் நோக்கம் வாழ்வைப் பேசுவதுதான் என விளக்கம் கொடுத்தார். அதோடு, வசனம் எழுத முடிந்தவரை எழுத்தாளர்களைப் பயன்படுத்துவது சிறந்தது எனும் கருத்தையும் முன் வைத்தார்.

நிகழ்வில் ஏறக்குறை 15 பேர் கலந்துகொண்டனர். இளம் தலைமுறையினரான அவர்களிடம் வல்லினம் குழு எதை எதிர்ப்பார்க்கிறது என அதன் ஆசிரியர் ம.நவீன் பேசினார். மலேசியத் தமிழர்களின் வாழ்வு ஆங்காங்கு சிதறி இருக்கின்ற சூழலில் அவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் குறித்தும், இயக்குனர்களிடம் இருக்க வேண்டிய அடிப்படை சமூக பொறுப்பு குறித்தும் அவர் பேச்சின் உள்ளடக்கம் இருந்தது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய பட்டறை மாலை 5 மணிக்கு முடிவுற்றது. வந்திருந்த இளம் இயக்குனர்கள் தங்கள் கருத்துகளை மிக ஆரோக்கியமாகப் பகிர்ந்துகொண்டனர். இப்பட்டறை இயக்கத்தை நோக்கித் தூண்டுவதாக இல்லாமல், குறும்படம் குறித்த இதற்கு முந்தைய முன் முடிவுகளை  கலைத்துப்போடுவதற்காக நடத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் சொல்லப்பட்ட வருகையாளர்களின் கருத்துகள், பட்டறை தன் நோக்கத்தைத் தொட்டுவிட்டதை உறுதி செய்தது.