லிம்: பிஎன்னின் அதிகாரப்பூர்வப் பயணங்கள் செலவுமிக்கவை

பினாங்கில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில அரசு வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்ட தொகை ரிம1.2மில்லியன் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

2008 மார்ச்சிலிருந்து 2011 மார்ச் வரை முதலமைச்சரின் 20 வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன செலவு ரிம146,000 என்றும் துணை முதலமைச்சர் மற்றும் மாநில ஆட்சிமன்ற (எக்ஸ்கோ) உறுப்பினர்களின் 123 பயணங்களுக்கு ஆன செலவு ரிம1,066,697 என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிஎன் மாநில ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சரின் 10 அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு ரிம149,326-மும், துணை முதலமைச்சர் மற்றும் எக்ஸ்கோ உறுப்பினர்களின் 56 பயணங்களுக்கு ரிம782,988-மும் செலவிட்டுள்ளது.

இது 2005 மார்ச் மாதம் தொடங்கி 2008 பிப்ரவரிவரை பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகையாகும் என்று லிம் கூறினார்.

“இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பிஎன் அரசு முதலமைச்சரின் ஒவ்வொரு பயணத்துக்கும் சராசரியாக செலவிட்டது ரிம14,932.60. பக்காத்தான் அரசு ரிம7,314.20 செலவிட்டிருக்கிறது”, என்றாரவர்.

சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் மக்டார் ஷாபி கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளித்தபோது டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் இவ்வாறு கூறினார்.

அந்த பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சரும் எக்ஸ்கோ உறுப்பினர்களும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள அரசு எவ்வளவு செலவிட்டது என்பதை அறிந்துகொள்ள விரும்பினார். அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக பிஎன் அரசும் பக்காத்தான் அரசும் செலவிட்ட தொகைகளை ஒப்பிட வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டிருந்தார்.

அரிப் ஒமார் ஷா (செபராங் பிறை-அம்னோ),  முதலமைச்சர் மற்றும் மாநில எக்ஸ்கோ உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பயணங்களின்போது  அவர்களின் குடும்பத்தாருக்காகச்  செலவிடப்பட்டது எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள விரும்பினார்.

பக்காத்தானின் மூன்றாண்டுக்கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன செலவுகள் பற்றிய விவரமான பட்டியல் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், லிம் விவரமான பட்டியல் இன்னும் தம் கைவசம் வந்து சேரவில்லை என்றார்.

அப்போது ஸ்ரீடெலிமா உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர், எழுந்து நின்று அரசு, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆடம்பர வைர மோதிரம் வாங்குவதற்காக பொதுப்பணத்தைச் செலவிட்டது உண்டா என்று கேட்டார்.

அதற்கு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இராயர், அது மாநில அரசின் பட்ஜெட்டுடன் தொடர்பு கொண்ட கேள்விதான் என்றார்.

“நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், பிரதமரின் துணைவியாருக்காக ரிம24மில்லியன் வைர மோதிரம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

“அது போன்ற மோதிரத்துக்காக பினாங்கு மாநிலம் அரசுப் பணத்தைச் செலவிட்டிருக்கிறதா என்பதைத்தான் முதலமைச்சரிடம் கேட்டேன்”, என்றவர் விளக்கினார்.

பினாங்கு சட்டமன்றத்தின்  இன்றைய கூட்டம் கேள்வி-நேரத்துடன் தொடங்கியது. இன்று பிற்பகல் மாநில வரவு-செலவுத் திட்டம்  சமர்பிக்கப்படும்.

தீபாவளியை முன்னிட்டு நாளை கூட்டம் இருக்காது. சட்டமன்றம் மீண்டும் அக்டோபர் 31-இல் கூடும்.நவம்பர் 4வரை நடைபெறும்.