மகாதிர்: எம்ஏஎஸ் தனியார்மயம் சரியான முடிவல்ல

masமலேசிய  விமான  நிறுவன(எம்ஏஎஸ்)த்தைத்  தனியார்மயப்படுத்துவதால், பணம்  வீணாகும்  என்பதைத்  தவிர  எந்த  மாற்றமும்  ஏற்படப்போவதில்லை  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

மேலும், கஜானா  நேசனல்  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  நிறுவனம்  என்பதால்  அது  எம்ஏஎஸ்-ஸை  எடுத்துக்கொள்வது  தனியார்மயமாக்கலா,  தேசியமயமாக்கலா  எனவும்  அவர்  வினவினார்.

“நான்  சொல்வது தவறாகக்கூட  இருக்கலாம். ஆனால், எம்ஏஎஸ்-ஸில் 70 விழுக்காட்டுப்  பங்கு  வைத்துள்ள  கஜானா,  நிறுவனம்  மொத்தத்துக்கும்  உரிமையாளர்  ஆவதால்  பெரிய மாற்றம்  நிகழப்போவதில்லை. புதிதாக  சிலர்  வருவார்கள். கொளுத்த  சம்பளமும், அலவன்சும், போனசும்  வாங்கிக்  கொண்டிருப்பார்கள், அவ்வளவுதான்”, என்று மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.

70விழுக்காட்டுப்  பங்குகள்  இருக்கும்போதே  ஒன்றும்  செய்ய  முடியாத  கஜானா,   100விழுக்காட்டுப் பங்குகளை  வைத்துக்கொண்டு  பெரிய  மாற்றத்தைக்  கொண்டுவரும்  என  எதிர்பார்ப்பதற்கில்லை  என்றாரவர்.