2012-இல் பிஎன் அரசாங்கத்தைக் கவிழ்க்க அன்வாரிடம் போதுமான எம்பிகள் இருந்தால் அவருடன் சேர்ந்துகொள்ள வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் தயாராக இருந்தாராம். எதிரணி தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறினார்.
அனிபாவிடம் தாம் பேரம் பேசவில்லை என்று கூறிய அன்வார், அவருக்குத் துணைப் பிரதமர் பதவி கொடுக்க நினைத்ததில்லை என்றார்.
அனிபாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில் சாட்சியமளித்த அன்வார், முழு அமைச்சராக்கவில்லை என்பதால் அனிபா அப்போதைய பிரதமர் அஹ்மட் படாவிமீது கோபமாக இருந்தார் என்று கூறினார்.
“அனிபாவுக்கு போக்குவரத்து துணை அமைச்சர் பதவிதான் கொடுக்கப்பட்டது. அவர் அதை ஏற்கவில்லை. என்னிடம் போதுமான எண்ணிக்கையில் ஆள்கள்(எம்பிகள்) இருந்தால் என்னுடன் சேர்ந்துகொள்ள அவர் தயாராக இருந்தார்..
“உயர்ந்த பதவி கிடைக்கலாம் என நினைத்ததால் எங்களிடம் வந்தார். பல பிஎன் எம்பிகள் அப்போதைய பிரதமரிடம் அதிருப்தி கொண்டிருந்தனர். அப்போதுதான் செப்டம்பர் 16 திட்டம் உருவானது. பதவிக்காக பலர் எங்களிடம் வந்தனர்”.
கட்சித் தாவினால் துணைப் பிரதமர் பதவி கொடுப்பதாக எதிரணித் தலைவர் பேரம் பேசினார் என்று அனிபா கூறியதற்கு எதிராக அவர்மீது தொடுத்துள்ள வழக்கில் அன்வார் இவ்வாறு கூறினார்.
2008-இல், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டமொன்றில் அனிபா அவ்வாறு கூறினாராம்.