தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவதை எண்ணி பெர்சே வருத்தம்

bersihதேர்தல் சீரமைப்புக்குப்  போராடும் பெர்சே  அமைப்பு, அடுத்தடுத்து  பலர்  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  குற்றம் சாட்டப்படுவது  குறித்து  கவலையடைந்துள்ளது. அது  ஜனநாயகத்துக்கு  விரோதமானது என்று  அது  கூறியது.

தற்போதைய  அரசியல்  நிலைக்கு  எதிராக சிறிதளவு  எதிர்ப்பு  காட்டினால்கூட  தேச  நிந்தனைச்  சட்டம்  பாய்கிறது.

“இது ஜனநாயகத்துக்கு  முரணானது”, என்று  பெர்சே-இன்  அறிக்கை  கூறுகிறது. .

நேற்று ஷா  ஆலம்  எம்பி, காலிட்  சமட்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  குற்றம் சாட்டப்பட்டார். இன்று  ஸ்ரீடெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ராயர்  மீதும்  அதே  குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டது.

இதே  சட்டம்,  பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன், சமூக  ஆர்வலர் ஆடம்  அலி  அப்துல் ஹாலிம், பத்து  எம்பி  சுவா  தியான்  சங்,  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா) தலைவர் அப்துல்லா  ஷேக் அப்துல்  ரஹ்மான்,  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்  ஆகியோருக்கு  எதிராகவும்  பயன்படுத்தப்பட்டதை  பெர்சே  சுட்டிக்காட்டியது.

கருத்துகளை  அடக்கிவைக்கும்  அரசாங்கத்தின்  முயற்சி குடிமக்களின்  கருத்துச்  சுதந்திரத்தை  மீறும்  செயலாகும்  என்று  குறிப்பிட்ட பெர்சே  தேச நிந்தனைச்  சட்டத்தை  அகற்ற வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்தது.