“தொலைவிலிருந்து முடுக்கிவிடப்படும்” ஆள் எம்பி ஆக முடியாது

 

Selangor sultanசிலாங்கூர் அரண்மனை வட்டாரத்தை மேற்கோள் காட்டி இன்று வெளிவந்துள்ள ஓர் ஆங்கில நாளேட்டின் செய்திப்படி “தொலைவிலிருந்து முடுக்கிவிடப்படும்” ஆள் மாநிலத்தின் மந்திரி புசார் ஆவதை சுல்தான் விரும்பவில்லை.

ஆங்கில நாளேடான த ஸ்டாரின் செய்திப்படி, அரண்மனை விரும்புவது அப்பதவியில் இருப்பவர் மக்களின் நலனில் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டுமே தவிர வேரொருவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவராக இருக்கக்கூடாது என்று அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

“எம்பி சட்டமன்றத்தின் பெரும்பான்மையினரால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து மாநிலத்தை நிர்வகிக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு மக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு மாநிலத்தின் மேம்பாட்டை உச்சநிலைக்கு கொண்டு செல்லக்கூடியவரை ஆட்சியாளர் விரும்புகிறார்”, என்று அந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி கூறப்பட்டுள்ளது.

அந்த வட்டாரத்தின் கூற்றுப்படி சிலாங்கூர் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 51(1), 53(2)(a), (4) மற்றும் 55(2)(a) ஆகியவற்றின் கீழ் தமது உசிதப்படி சட்டமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஒருவரை மாநிலத்தின் மந்திரி புசாராக நியமிப்பதற்கான முழுமையான அதிகாரம் சுல்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

“(நியமிக்கப்பட்ட) அவர் அனைத்து தரப்பினருடனும், தமது சொந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட, இணைந்து செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதோடு அரண்மனையுடன் நல்லுறவை பேணுபவராக இருக்க வேண்டும்”, என்று கூறிய அந்த வட்டாரம், பக்கத்தான் ரக்யாட் அதன் உட்கட்சி பிரச்சனைகளை இழுத்துப் போட்டு மாநிலத்தின் நிர்வாகத்தை நிலைகுழையச் செய்யக்கூடாது என்று மேலும் கூறிற்று.

அந்த நாளேட்டின் செய்தியில் எவரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது பிகேஆர் தலைவரைத்தான் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.