கைது செய்யப்படுவது பற்றி நாங்கள் அஞ்சவில்லை

 

Arrest no fearசாபா மற்றும் சரவாக் மக்கள் கைது செய்யப்படும் சாத்தியம் குறித்து நடுங்க வில்லை என்று சாபா ஸ்டார் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் இன்று கூறினார்.

தாம் கைது செய்யப்பட்டாலும் கூட, தங்களுடைய உரிமைக்கான போராட்டம் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.

மாறாக, அரசாங்கத்தின் கடும் நடவடிக்கைகள் போராட்டத்திற்கு கூடுதல் உந்தும் சக்தியைக் கொடுக்கும் என்றாரவர்.

“நான் எதற்கும் தயார்படுத்திக் கொள்ளப்போவதில்லை. நான் பிராத்தனை செய்வேன்.  எந்த கைது நடவடிக்கையும் சாபா மற்றும் சரவாக் போராட்டத்திற்கு நல்லதாகும்.

“அது இன்னும் வலுவடையும் என்பதோடு இறுதியில் போர்னியோ மாநிலங்களின் பிரிதலுக்கு இட்டுக் செல்லும்”, என்று பிரிவினைவாதிகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட மருட்டல்களுக்கு எதிர்வினையாற்றிய அவர் பிரகடனம் செய்தார்.

கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு பெடரல் தலைவர்கள் சாபாவும் சரவாக்கும் மலேசியா அமைக்கப்படுவதற்கு ஒப்புக்கொண்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்று கடுமையான வாசகத்தைக் கொண்ட அவரது அறிக்கை கூறுகிறது.

“மலேசியா உருவாக்கப்படுவதற்கான அடிப்படை மதிக்கப்படவில்லை என்றால், சாபாவும் சரவாக்கும் மலேசியாவை விட்டு விலகும் சட்டப்பூர்வமனா உரிமையைக் கொண்டிருக்கின்றன”, என்று அவர் கூறினார்

சாபா மலேசியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பொறுப்பானவர்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது என்று நேற்று துணை ஐஜிபி முகமட் பாக்ரி ஸினின் கூறியிருந்தார்.