என்யுஜே: மலேசியாகினி செய்தியாளரிடம் போலீஸ் மன்னிப்புக் கோர வேண்டும்

 

Susan2நேற்று பினாங்கில் மலேசியாகினி செய்தியாளர் சூசன் லூன் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு போலீஸ் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் இன்று மாலை தேசிய செய்தியாளர் சங்கம் கேட்டுக் கொண்டது.

“சில குறிப்பிட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் செய்த புகாரின் அடிப்படையில் எவரையும் விசாரிக்கும் உரிமை போலீசுக்கு இருந்த போதிலும், சூசனை பொறுத்த வரையில் தேசிய நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் திடமாகக் கருதுகிறோம். இக்கைது நடவடிக்கையால் சூசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மனச் சங்கடம் மற்றும் அசௌகரியங்களுக்காக போலீஸ் அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்”, என்று என்யுஜே கூறுகிறது.

சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்தப்படுவதை உள்ளூர் ஊடகங்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை; பொது மக்களும் ஆதரித்ததில்லை என்று என்யுஜே தலைவர் சின் சங் சியு ஓர் அறிக்கையில் கூறினார்.

susan3ஒரு செய்தியாளரை விசாரிப்பதற்கு தேச நிந்தனைச் சட்டத்தை பயன்படுத்துவது செய்தியாளர்களை அச்சுறுத்தும் வழியாகும் என்பதோடு ஊடகச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றாரவர்.

இவ்விவகாரம் குறித்து என்யுஜே உள்துறை அமைச்சர் அஹமட் ஸாஹிட் ஹமிடிக்கு கடிதம் எழுதப் போவதாக தெரிவித்தார்.

நேற்று, சூசன் லூன் கைது செய்யப்பட்டு அவர் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுடன் நடத்திய நேர்காணல் பற்றி ஒன்பது மணி நேரத்திற்கு விசாரிக்கப்பட்டார்.