பக்கத்தானில் இருப்பதால் பாஸ் மலாய் ஆதரவை இழக்கவில்லை

khalidபாஸ்  மூன்று-கட்சி  கூட்டணியான  பக்கத்தானில்  இருப்பதால்  மலாய்-முஸ்லிம்களின்  ஆதரவு  குறைந்துவிட்டதாகக்  கூறும்  அக்கட்சியின்  பழமைவாதிகளை  காலிட்  சமட்  சாடியுள்ளார்.

“மலாய்க்காரர்  ஆதரவு (ஏகபோகமாக) நமக்குத்தான்  என்ற  நிலை  என்றும்  இருந்ததில்லை- அப்படியிருக்க  மலாய் ஆதரவு  குறைந்துபோனதாக  எப்படிக் கூற  முடியும்? (இன்றைய  நிலையை) 2008, 2013 பொதுத்  தேர்தல்களுடன்  ஒப்பிடக்  கூடாது….”, என  ஷா  ஆலம்  பாஸ்  எம்பி-ஆன  காலிட்  சொன்னார்.

“2008-இல்  அம்னோ  அரைத்  தூக்கத்தில் இருந்தது, மெத்தனமாக இருந்தது. ஆனால், 2013 பக்கத்தானின்  தாக்குதலை எதிர்கொள்ளத்  தயார்நிலையில்  இருந்தனர். அதனால், ஏற்கனவே  இழந்திருந்த  மலாய்  ஆதரவில் 1 அல்லது  2 விழுக்காட்டைத்  திரும்பப்  பெற்றனர்”, என்றாரவர்.

பாஸில் உள்ள பழமைவாத  உலாமாக்களில்  சிலர், கடந்த  தேர்தலில்  மலாய்க்காரர்  ஆதரவு  குறைந்ததைச் சுட்டிக்காட்டி  அதற்கு  அக்கட்சி  டிஏபி-யுடனும்  பிகேஆருடன்  உறவு  கொண்டிருப்பதுதான்  காரணம்  எனச்  சொல்லிக்கொண்டிருப்பது பற்றிக்  கருத்துரைத்தபோது  காலிட்  இவ்வாறு  கூறினார்.