ஐஜிபிக்கு உத்தரவு: குழந்தையை இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும்

 

Indira - IGP ordered1பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியிடம் அவரது ஆறு வயதுக் குழந்தை பிரசன்னா டிக்சாவை கண்டுபிடித்து ஒப்படைக்க போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாகாருக்கு 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திராவின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் அவருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கூடுதல் அவகாசம் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்ததைத் தொடர்ந்து இந்திராவின் குழந்தையை அவரிடம் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று ஈப்போ உயர்நீதிமன்றம் மே 30, 2014 இல் வழங்கிய தீர்ப்பு அமலாக்கப்பட வேண்டும்.

ஏஜி, ஐஜிபி மனுக்களும் நிராகரிக்கப்பட்டன

ரித்துவானின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தலையிடுவதற்கு அனுமதி கோரி சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) மற்றும் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கே. பத்மநாதன் என்ற ரித்துவானை கைது செய்து, குழந்தையை மீட்டெடுக்க போலீஸ் படை தலைவர் காலிட்டிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் இருக்கிறது. அதைச் செய்ய தவறினால், காலிட் ஈப்போ உயர்நீதிமன்றத்தின் முன் தோன்றி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதற்கான காரணங்களை விளக்க வேண்டும்.