கோபிந்த் சிங் டியோ: தேச நிந்தனைச் சட்டம் 1948 சட்டப்பூர்வமானதா?

 

Azmi-challebges 1தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசியர் அஸ்மி ஷரோம் காலனித்து ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அச்சட்டம் அரசமைப்புச் சட்டப்படி சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை எழுப்பும் மனுவை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

” அஸ்மி செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனு தேச நிந்தனைச் சட்டம் 1948 செக்சன் 4(1) இன் சட்டப்பூர்வத்தன்மையை நிர்ணயிக்க அதனை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தரவைக் கோருகிறது.

“மேற்கூறப்பட்ட மனுவின் விளைவாக, அஸ்மி அவருக்கு எதிராகச் சாட்டப்பற்றுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தடைவிதிக்கவும் அல்லது அகற்றவும் கோரும் உத்தரவையும் வேண்டுகிறார்”, என்று அவரது வழக்குரைஞர் கோபிந் சிங் டியோ மனுவை ஜாலான் டூத்தா நீதிமன்ற கம்பளக்ஸில் தாக்கல் செய்த பின்னர்Azmi-challebges 2 செய்தியாளர்களிடம் கூறினார்.

கீழ்க்கண்ட காரணங்களுக்காக அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றார் கோபிந்த் சிங்:

1. தேச நிந்தனைச் சட்டம் 1948 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதல்ல.

2. பெடரல் அரசமைப்புச் சட்டம், பிரிவு 10, பேச்சு சுதந்திரத்திர்கு உத்தரவாதம் அளிக்கிறது.

3. சட்டப் பிரிவு 10 இல் அளிக்கப்பட்டிருக்கும் பேச்சு சுதந்திரத்திற்கு நாடாளுமன்றம் மட்டுமே சட்டத்தின் வழி கட்டுப்பாடு விதிக்கலாம் என்று பிரிவு 10(2) திட்டவட்டமாகக் கூறுகிறது. அது பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது நாம் கூறுகிறோம்.

4. தேச நிந்தனை கட்டளை (Ordinance) 1948 இல் சுதந்திரத்திற்கு முன்னதாக பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் சட்ட திருத்த மறு ஆய்வு ஆணையத்தின் வழி அது மறு ஆய்வு செய்யப்பட்டு சட்டமாக அரசு ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.

5. அது நாடாளுமன்றத்தால் இயற்றப்படவில்லை. ஆகவே அது பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 10 (2) இன் கீழ் அஸ்மி ஷரோமுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்த முடியாது.

இச்சட்டத்தின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து பல தடவைகளில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தாலும், மேற்கூறப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் இச்சட்டத்திற்கு விடப்படும் முதல் சவால் இதுதான் என்றார் கோபிந்த் சிங்.

அஸ்மிக்கு எதிரான குற்றச்சாட்டு அக்டோபர் 3 இல் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாக அடுத்த வாரம் இம்மனு செவிமடுக்கப்படும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.