விட்டுக் கொடுப்பதற்கில்லை, அஸிசாதான் மந்திரி புசார் வேட்பாளர்

 

Anwar-no compromiseசிலாங்கூர் மந்திரி புசார் நியமன விவகாரத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு படி இறங்கி வந்துள்ளார் என்ற கூற்றை பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் நிராகரித்தர். மந்திரி புசார் வேட்பாளர் விவகாரத்தில் அன்வார் எந்த உடன்படிக்கையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.

மந்திரி புசார் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் அன்வார் மற்றும் பிகேஆரின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. வேட்பாளர் இன்னமும் டாக்டர் வான் அஸிசாதான். இருந்தாலும், இக்கட்டத்தில் அவர் மாநிலத்திற்கு தலைமை ஏற்கும் சாத்தியம் இயலாததாக கருதப்படுகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“அன்வார் எழுத்து மூலமாக ஓர் உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டார் என்று கூறும் செய்தியும் இது போன்ற இதர செய்திகளும் தவறானவை”, என்று சைபுடின் இன்று அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

அடுத்த எம்பியாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நியமிக்கப்படுவதற்கு அன்வார் விட்டுக் கொடுப்பார் என்ற ஆரூடங்களைத் தொடர்ந்து இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.

“பிகேஆரின் முடிவு சிலாங்கூர் மாநில சட்டங்கள் மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி அமைவுமுறையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது”, என்று சைபுடின் வலியுறுத்தினார்.

“நாங்கள் அந்த அடிப்படை நிலையிலிருந்து நகர்ந்து விட்டோம் என்ற தோற்றத்தை தரும் எந்த ஒரு செய்தியையும் வினியோகிப்பது நியாயமற்றதாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.