மகாதீர், நஜிப் ஆகியோருக்கு எதிராக போலீஸ் புகார்

 

Mahathir and najibஉள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி தேச நிந்தனை பற்றி செய்யப்படும் போலீஸ் புகார்கள் 24 மணி நேரத்திற்குள் விசாரிக்கப்படும் என்று அளித்திருந்த்உறுதிமொழியைத் தொடர்ந்து ஒரு டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகம்மட் மற்றும் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோருக்கு எதிராக போலீஸ் புகார்செய்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறித்து மகாதீர் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி டிஎபி செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இன்று பின்னேரத்தில் செந்துல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார்.

2010 ஆம் ஆண்டு, அம்னோ பொதுக்கூட்டத்தில் நஜிப் தேச நிந்தனை கருத்துகளை கூறியதாக அந்த எம்பி கூறினார்.

2011 ஆம் ஆண்டில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு செராமாவில் கூறியதாக சொல்லப்படும் கருத்துகளுக்கு எதிராக அவர் மீது போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இப்போலீஸ் புகார்கள் செய்யப்படுகின்றன.

இப்போது போலீசார் மகாதீரை 24 மணி நேரத்தில் விசாரிப்பார்களா என்று லிம் கிட் சியாங் இன்று முன்னேரத்தில் உள்துறை அமைச்சர் ஸாகிட்டை கேட்டார்.

கடந்த திங்கள்கிழமை பெங்காலான் குபோர் இடைத்தேர்தல் கூட்டத்தில் நிகழ்த்திய தேசிய நிந்தனை அடங்கிய உரைக்காக நேற்று பேராக் டிஎபி உள்துறை அமைச்சர் ஸாகிட்டுக்கு எதிராகவே போலீஸ் புகார் செய்தது.

அவருக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள போலீஸ் புகார் மீது போலீசார் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்து விட்டனரா என்பதை வெளியிடுமாறு கிட் சியாங் உள்துறை அமைச்சர் ஸாகிட்டிடம் கோரியுள்ளார்.