சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் நான்கு பிரதிநிதிகள் வேண்டும், பாஸ் வலியுறுத்துகிறது

PAS - Khalid one of the bestசிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் அதற்கு தற்போது இருக்கும் நான்கு இருக்கைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று பாஸ் பிடிவாதம் செய்கிறது.

தங்களுக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் 15 இருக்கைகள் இருப்பதால் ஆட்சிக்குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் பாஸ் கமிஷனர் இஸ்கந்தர் அபு சாமாட் கூறினார்.

“நாங்கள் (அந்த நான்கு ஆட்சுகுழு பதவிகளை) தற்காக்கிறோம். அது தெளிவானதாகும்.

“நாங்கள் முடிவு (யார் ஆட்சுக்குழு உறுப்பினர்கள் என்று) எடுத்து விட்டோம். அதனை மத்தியக்குழுவின் அங்கீகாரத்திற்கு தாக்கல் செய்து விட்டோம்”, என்று இன்றிரவு சிலாங்கூர் பாஸ் கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக பிகேஆர் துணைத் தலைவர் ஸுரைடா கமாருடின் ஆட்சிக்குழுவின் பாஸ் கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், ஏனென்றால் பிகேஆரின் மந்திரி புசார் பதவிக்கான நியமனத்தை பாஸ் ஆதரிக்கவில்லை என்றார்.

முன்னாள் மந்திரி புசார் ஆட்சிக்குழுவிலிருந்து பிகேஆர் மற்றும் டிஎபி ஆகியவற்றின் பிரதிநிதிகளை அகற்றிய போது பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்ததால் அவர்களை டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் “துரோகிகள்” என்று முத்திரை குத்தினார்.

காலிட்டுடன் கடைசி வரையில் இருந்த நான்கு பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்களில் இஸ்கந்தரும் ஒருவர்.

இவ்விவகாரம் குறித்து புதிய மந்திரி புசாருக்கும் பாஸ்சுக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று இஸ்கந்தர் கூறினார்.