சிலாங்கூர் அரசமைப்புச் சட்ட சீர்திருத்ததிற்கு ஆதரவு

 

Reform state constitution1 ஜனநாயக ஆதரவு அமைப்பான கெம்பாலிக்கான் சிலாங்கூர்-கு ஜனநாயக கோட்பாடுகள் மேலோங்குவதற்கு மாநில அரசமைப்புச் சட்டத்தை சீர்திருத்தம் செய்யும்படி பக்கத்தான் ரக்யாட்டிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“ஜனநாயாக கோட்பாடுகளை கைவிட்டதற்காகவும், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலுக்கான அதன் ஆதரவை மிகக் குறுகிய காலத்தில் அதன் ஆதரவை துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு மாற்றியதற்காகவும் நாங்கள் பக்கத்தான் ரக்யாட்டை கண்டிக்கிறோம்.

“பக்கத்தான் ரக்யாட்டின் இந்நடத்தை மந்திரி புசார் நியமனத்தில் ஆட்சியாளரின் தலையீட்டிற்கு ஓசையின்றி ஒப்புதல் அளித்துள்ளது”, என்று அந்த அரசு சார்பற்ற அமைப்பு இன்று ஓர் அறிக்கையில் கூறியது.

அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை “கைவிட்டதற்காகவும்”, “சுல்தான் செய்த நியமனத்திற்கு சரணடைந்ததற்காகவும் எதிரணித் தலைவர் அன்வாரை அக்குழு சாடியது.

“இது சிலாங்கூரில் பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றும் அது கூறியது.

2008 ஆம் ஆண்டின் பேராக் முன்மாதிரியை பின்பற்றி இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்தின் நிலை மற்றும் ஜனநாயக கோட்பாடுகள் ஆகியவற்றுக்கான விளக்கத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் கெம்பாலிக்கான் சிலாங்கூர்-கு கூறியது.

“மாநிலத்தின் உச்ச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் கடப்பாட்டை அது விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுடன் மக்களின் கட்டளையை அலட்சியப்படுத்தக் கூடாது.

“சிலாங்கூர் மாநில எம்பி நெருக்கடி சிலாங்கூர் மாநிலத்தின் ஜனநாயக அமைவுமுறையின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது” என்பதைச் சுட்டிக் காட்டிய அந்த அமைப்பு மாநில அரசமைப்புச் சட்டம் ஒட்டுமொத்தமாக சீர்திருத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.