ஏஜியும் நீதித்துறையும் சுயேட்சையானவை, அமைச்சர் பால் கூறுகிறார்

 

Paul lowகடந்த மாதத்திலிருந்து 20 பேர்களுக்கு எதிராக தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் வேளையில், சட்டத்துறை தலைவர் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சுதந்திரம் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கப்படவில்லை என்று பிரதமர்துறையின் அமைச்ச்சர் பால் லவ் இன்று கூறினார்.

அனைத்துலக சட்ட மாநாட்டில் இன்று பேசிய அவர், குறிப்பிட்ட சம்பவங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதித்துறைக்கும் ஏஜிக்கும் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவில்லை என்று கூறிய அமைச்சர், பொறுக்கியெடுத்து குற்றம் சாட்டப்படுகிறது என்பதையும் மறுத்தார்.

தேச நிந்தனைச் சட்டத்தை தற்காத்து பேசிய அவர், “என்ன சொல்லலாம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறை இருக்க வேண்டும், இல்லையென்றால் பெரும் குழப்பம் விளையும் என்றார்.

“நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அச்சட்டம் இருக்கிறது. நமது சமுதாயம் பற்றி நாம் அறிவோம். அதில் சில தரப்பினர் மற்றவர்களை விட அதிகப் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதாக உணர்கின்றனர். சாதாரண மக்கள் குழப்பத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்”, என்றார் அமைச்சர் விளக்கமளித்தார்.

நாட்டில் குழப்பம் பற்றி பேசிய அமைச்சர் ஒரு கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார். பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு முன்பு கூறப்பட்ட சிலவற்றால் அப்போது கலவரங்கள் ஏதும் ஏற்படாதிருக்கையில், அது ஏன் இப்போது தேச நிந்தனையானது என்று கருதப்படுவதோடு அதனைக் கூறியவர் குற்றம் சாட்டப்படுகிறார் அல்லது விசாரிக்கப்படுகிறார் என்பதுதான் அக்கேள்வி.