தாம் சின்னத்திற்கும் மேலானவர் என்று சுல்தான் கூறுகிறார்

 

Selangor sultanஅரச அமைவுமுறையின் கடமை வெறும் “சம்பிரதாயமான” ஒன்றல்ல என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா கூறினார்.

மந்திரி புசார் நியமன நெருக்கடியில் குற்றம் கண்டவர்களைச் சாடிய சுல்தான், மாநிலத்தில் அவரது கடமை அமைதியையும் மாநில மற்றும் அதன் மக்களின் சுபிட்சத்தையும் பாதுகாப்பதாகும் என்றார்.

“சுல்தானின் உண்மையான கடமை என்ன என்பதை மக்களுக்கு தெரிய வைக்காமல் இருப்பதால், அரச அமைவுமுறை கடமை ஏதுமற்ற அல்லது சிலாங்கூர் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகார இல்லாத வெறும் சின்னம்தான் என்று மக்கள் இப்போது நம்புகின்றனர்.

“அரச அமைவுமுறையின் கடமை மற்றும் அதிகாரங்கள் பற்றி எதுவும் அறியாத அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்று நான் நம்புகிறேன், அல்லது அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருப்பதால் அவர்கள் வேண்டுமென்றே தவறாக நினைக்கின்றனர் என்று நான் திடமாக நம்புகிறேன்”, என்று சுல்தான் மேலும் கூறினார்.

புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிப் பிரமாண சடங்கின் போது ஆற்றிய இக்காட்டமான உரையில் மந்திரி புசார் நியமன நெருக்கடியின் போது பக்கத்தான் ரக்யாட் கட்சிகளின் நடத்தையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

“மந்திரி புசார் விவகாரம் எனது மனதையும் உணர்வையும் திறந்து விட்டு சிலாங்கூர் அரசியல் நிலைமை குறித்த எனது கருத்தை உருவாக்கியது.

“அரசியல்வாதிகள் நிரந்தரமற்றவர்கள். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பணியாற்றுவார்கள்; அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் மாற்றப்படலாம். ஆனால், நான் எனது கடைசிக் காலம் வரையில் ஆட்சி செய்வேன்”, என்றார் சுல்தான்.

மாநிலத்தில் நிலைத்தன்மை, சுபிட்சம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும் ஒரே நோக்கத்தில் புதிய மந்திரி புசாரை தேர்வு செய்ததாக கூறிய அவர், அதற்காக தமக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் அவரின் முடிவின்பால் நம்பிக்கை வைத்தவர்களுக்கும் நன்றி கூறினார்.

மாநிலம் மேம்பாடு அடைவதை உறுதி செய்வதுதான் தமது கடமை என்று விளக்கமளித்த அவர், மாநில நிருவாகத்தில் தலையிடுவதல்ல என்றார்.

“நான் மக்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய பிரச்சனைகள் சம்பந்தமாக மட்டுமே மந்திரி புசாருக்கு ஆலோசனை வழங்குகிறேன்”, என்று சுல்தான் மேலும் கூறினார்.