11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குடிமக்களாகிய இந்தியர்களுக்கு என்ன உள்ளது?

kula1-710712-மு. குலசேகரன், செப்டெம்பர் 29, 2014.

11 ஆவது  மலேசிய 5 ஆண்டு  திட்டம் 2016 ல் தொடக்கம் காண உள்ளது. அதில் நமது இந்தியர்களின் வளர்ச்சிக்காக என்ன சிறப்புத் திட்டங்கள் உள்ளன என்பது பற்றி இதுவரை ஒன்றும் தெரியவில்லை. அதற்கான பரிந்துரைகள் ஏதேனும் அரசாங்கத்தின்  பரிசீலனைக்கு ம.இ.கா கொண்டுசென்றுள்ளதா  என்பதும் தெரியவில்லை.

 

இந்தியர்களுக்காக ஒரு முழுமையான செயல் திட்டம் எந்த ஒரு 5 ஆண்டு திட்டத்திலும் பரிந்துரை செய்யப்படவில்லை. இந்தியர்கள்  சிறுபான்மையினர் என்று ஏற்றுக் கொள்ளும் இந்த அரசாங்கம் இதுவரையில் அவர்கள் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு சிறப்புத் திட்டங்களையோ அல்லது சிறப்பு சலுகைகளையோ வழங்காமல் இருப்பது வருந்துதற்குறியது.

 

51 வருடங்கள் ஆகியும் இன்னும் மலேசிய இந்தியர்களில் 40% மேல் 1000 ரிங்கிட்டிற்கு கீழ் வருமானம் பெறுபவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் 6 ஆண்டுகளில்  வளர்ச்சி அடைந்த நாடுகள்  பட்டியலில் மலேசியா இடம் பெறப் போகும் வேளையில், அப்பொழுதும் இந்தியர்கள் வளர்ச்சி அடைந்த சமூகம் என்ற அந்தஸ்தை பெறுவார்களா என்பது கேள்விக் குறியே !.

 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ம.இ.கா இப்பொழுதிலிருந்தே அரசாங்கத்திற்கு  இந்திய சமுதாயம்  முன்னேற சில அடிப்படைஆலோசனைகளை  வழங்க தன்னை தாயார்  படுத்திக்கொள்ளவேண்டும். அந்த ஆலோசனைகள் மேலோட்டமாக இல்லாமல் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டவைகளாகவும் அதை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உத்ரவாதத்துடனும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 

பூமிபுத்திராக்களுக்கு அரசாங்கம் பல திட்டங்களை  ஒவ்வொரு 5 திட்டத்திலும் ஆண்டும்  அறிவித்து வருகிறது.  அது போல குடிமக்களாகிய இந்தியர்களுக்கும் அமானா சஹாம் போன்ற சிறப்பு திட்டங்களை அறிவிக்கப்படவேண்டும்.

 

அனா, ஆவன்னா தெரியாதவர்களுக்கு கோடிக்கணக்கில் நிதி உதவி!

 

இந்தியர்களுக்கு அராசாங்கக் குத்தைகைகள் டி இ வகுப்புகளில்  கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவரவேண்டும் . ஏ பி வகுப்பு குத்தகைகள் எப்படி மலாய்க்காரர்களுக்கு  கொடுக்க வேண்டும் என்று சட்டம் இருக்கின்றதோ அதே போன்று இந்தியர்களுக்கும்டி இ வகுப்புக்களிலாவது குத்தகைகள் வழங்கபட வேண்டும் என்பதனை அராசாங்கம் கட்டயமாக்க வேண்டும். இதன் வழி அதிகமான  இந்திய தொழில் முனைவர்கள் இந்த நாட்டில் உருவாக்கப்படுவார்கள். இது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும்.

 

விவசாயத் துறையிலும் , கால் நடைத் துறையில் இந்தியர்கள் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறார்கள். இத்துறையில்  அவர்கள் மேலும் வளர்வதற்கு,முறையானதும் நிரந்தரமானதுமான  திட்டத்தை அரசாங்கம்  கொண்டிருக்கவில்லை. ஆடு மாடுவளர்ப்புக்கென சிறப்பு  ஊக்குவிப்பு நிதியினை  இந்தியர்களுக்கு என்றே  உருவாக்கப்படவேண்டும்.  அதில், இப்பொழுது அந்தத் துறையில் உள்ளவர்கள் பயனடைவதற்கான  வழிமுறைகளை ஏற்படத்த வேண்டும்.

 

இந்தியர்கள் இந்தத் துறையில் நன்கு அனுபவமும் பிடிப்பும் உள்ளவர்கள். அவர்களின் வழி பால் உற்பத்தி பெரிதும்  வளர்ச்சி காணும். கால்நடையப் பற்றி ஆனா ஆவன்னா கூட  அறிந்திராதா முன்னாள் அமைச்சர் ஷரிஷாட்டின் குடும்பத்தினருக்கு 25 கோடி வெள்ளியும் 5 ஆயிரம் ஏக்கர் நிலமும் கொடுத்து பாழாய்ப் போனது போல இல்லாமல் அந்தத் துறையில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்கு அது போன்று பணத்தையும் நிலத்தையும் கொடுத்திருந்தால் இந்நேரம் அதன் பலனை நாடு கண்கூடாக கண்டிருக்கும்.

 

சிறு சிறு தொழில் முனைவர்களை உருவாக்க  அரசாங்கம் பூமிபுத்ராக்களுக்கு செய்வது போல, இந்தியர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.  எடுத்துக்காட்டு, பாதுகாவலர்கள் நிறுவனங்களின் உரிமங்கள் எல்லாமே பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இதில் இந்தியர்களுக்கும்  10 விடுக்காடு கொடுக்கும்படி சட்டத்தில் இடம் வகுக்கலாமே ? இதுவும் சிறு சிறு இந்திய தொழிற்முனைவர்களை உருவாக்க வழிவகுக்குமே! இதே போல அதிகமாக  இந்தியர்கள் செய்யும் தொழிலான டாக்சி ஒட்டுனர்  தொழிலுக்கு புத்துயிர் கொடுத்து  அவர்கள் சொந்தக் காலில் நிற்க அவர்களுக்கு அதிகமான டாக்சி பெர்மிட்டுகளும் , டாக்சிகள் வாங்க கடனுதவியும் கொடுக்கலாமே!

 

தரமற்ற கல்லூரிகளால் அவதிக்குள்ளாக்கப்படும் மாணவர்கள்

 

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அதன் குடிமக்களின் கல்வி வளர்ச்சி முக்கியமான பங்கு வகிப்பதால், அந்தத் துறையில் இந்தியர்களுக்கென்று தனிப்பட்ட கோட்டா முறைய முன்பு போல மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

 

மெரிட்டோகிராசி என்கின்ற தகுதியின் அடிப்படையிலான புதிய அராசங்கக் கொள்கை இந்தியர்களுக்குச் சாதகமா அமையவில்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் அராசங்கம் அதையே விடாப்பிடியாக கடைபிடிப்பது முறையல்ல.  இந்தியர்களும் மலாய்க்காரர்களைப் போல இந்நாட்டு குடிமக்கள்தான் என்பதனை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் கல்வி கேள்விகளில் முன்னேறுவது நாட்டின் ஒட்டுமொத்தமுன்னேற்றதிற்கு  உறுதுணையாக விளங்கும்.

 

வெறும் அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் கல்வி விஷயத்தில் இந்தியர்களை ஓரங்கட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல. அதோடு அதிகமான இந்திய மாணவர்கள் மேற்கல்வி என்ற பெயரில் தரமற்ற கல்லூரிகளில் சேர்ந்து அரசாங்கக் கடன் உதவி பெற்று சான்றிதழ் பெற்று  வேலையும் கிடைக்காமல் வாங்கிய கடனை அடைக்கவும் முடியாமல்  தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? அதிகமான  கல்லூரிகள் அரசாங்கத்தின் அனுமதி பெற்று  தரமற்ற  கல்வினையை வழங்குவதனால், அதில் படித்து பட்டம் பெற்ற பெரும்பான்மையோருக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, வேலை கிடைப்பதில்லை. அராசாங்கம் அக்கல்லூரிகளுக்கு  அனுமதி கொடுத்திருந்தாலும்  அராசாங்கமே அவர்களுக்கு  வேலைக் கொடுப்பதில்லை. இது போன்று படித்து வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு அவர்கள் வாங்கிய கடனிலிருந்து  விதிவிலக்களிக்கவேண்டும் அல்லது அவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலைகிடைத்தால் மட்டுமே  கடனைச் திருப்பி கொடுக்கலாம் என்ற சலுகையை வழங்க வேண்டும்.

 

வி.டி சம்பந்தன் போன்றவர்கள் 1960களில்  தோட்ட துண்டாடல் தலை விரித்தாடிய போது அதனை எதிர்கொள்ளும்  வகையில் தேசிய நில நிதி கூட்டுறவுசங்கம் என்ற ஒன்றை நிறுவி ஒவ்வொரு தோட்ட தொழிலாளியிடமும் மாதம் ரிம 10 வீதம் வசூலித்து தோட்டங்களை வாங்கினார்.  இன்று  தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஒரு ஆலமரமாக வளர்ந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

 

அதைப்போலவே, முன்னாள் ம.இகாவின் தேசியத் தலைவர்  வி. மாணிக்கவாசகமும்  இந்தியர்களுக்காக ம.இ.கா யுனிட் டிரஸ்ட்டை ஆராம்பித்தார். இது போன்ற தூரநோக்குச் சிந்தனை  கொண்ட திட்டங்களை  இன்றைய ம.இ.கா தலைவர்கள் மேற்கொள்வதில்லை. அப்படியே அவர்கள் செய்திருந்தாலும் அத்திட்டங்கள்  அவர்களின் சுயநலதிற்காகவே  மேற்கொள்ளப்பட்டு பின்பு  குட்டிசுவரானதும் வரலாறு ஆகிவிட்டது.

 

இது போன்ற  தவறுகளால் இந்திய சமுதாயம் சீரழிந்து போகமால் இருக்க ம.இ.கா நல்ல பரிந்துரைகளை அடுத்த ஐந்தாண்டு திட்டதிற்காக அரசாங்கத்திடம் வழங்க வேண்டும்.