தேச நிந்தனைச் சட்டம் 1948 க்கு எதிராக மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களின் பேரணி அக்டோபர் 16 நடைபெறும் என்று அம்மன்றம் இன்று அறிவித்தது.
கடந்த மாதம் நடைபெற்ற மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இப்பேரணி நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இப்பேரணிக்கு “அமைதிக்கும் சுதந்திரத்திற்குமான நடை 2014” என்று பெயர்கொடுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மெர்போக் திடலில் காலை மணி 10.30 க்கு நடையை தொடங்குவதற்கு வழக்குரைஞர்கள் அங்கு கூடுவர். அவர்கள் வழக்குரைஞர் உடை அணிந்திருப்பார்கள் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறினார்.
“நிரந்தர அமைதி, ஓற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை” ஆகியவை “ஆரோக்கியமான விவாதம், பல்வேறான கருத்துகள் மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் வழி வளர்க்கப்படும்”, என்று கிறிஸ்டபர் கூறினார்.
“தேச நிந்தனைச் சட்டம் 1948 இக்கோட்பாடுகளுக்கும், ஒரு சிறந்த மலேசியாவுக்கான நமது உயர்ந்த நோக்கத்திற்கும் நேர் எதிரானது என்பதோடு எதிர்விளைவுகளைக் கொண்டது.
வழக்குரைஞர் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வழக்குரைஞர் தொழில் பயிற்சி பெறும் மாணவர்களையும் அவர்களுடைய நோக்கங்களை தெரிவிப்பதற்காகவும் சிறந்ததோர் மலேசியாவுக்கான அவர்களின் ஆதரவை அளிப்பதற்காகவும் இந்த நடையில் தவறாது பங்கேற்குமாறு கிறிஸ்டபர் லியோங் கேட்டுக் கொண்டார்.
இதோ அன்வர் மாமாவின் தூண்டுதல்..
உதயகுமாரும் வேறு சிலரும் ‘வெளியே’ வந்துவிட்டதால், அவர்கள் இருந்த ‘செல்’ கள் காலியாக உள்ளன. ஆளே இல்லாத சிறைக் காவலர்களுக்கு தண்டச் சம்பளம் கொடுப்பதா? தேச நிந்தனை சட்டத்தின் மூலம் சிறைகளை நிரப்புவதே தற்போதைய அரசின் தலையாய வேலை.
மலேசிய முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டீர்களா? உங்களுக்கு எதிராக அவர்கள் பேரணி நடத்துவார்களே!